தேசம்

முழுநேர அலுவலகப் பணிக்குத் திரும்ப விரும்பாத இந்தியர்கள்: காரணம் என்ன?

காமதேனு

இந்தியாவைச் சேர்ந்த ஊழியர்கள், முழுநேர அலுவலகப் பணிக்குத் திரும்ப ஆர்வம் காட்டுவதில்லை என ஹெச்.பி நிறுவனம் நடத்திய ஆய்வில் தெரியவந்திருக்கிறது.

அமெரிக்காவைச் சேர்ந்த தகவல் தொழில்நுட்ப நிறுவனமான ஹெச்.பி, கணினிகள் முதல் பிரின்டர்கள் வரை தயாரிக்கும் மிக முக்கிய நிறுவனமாகும்.

இந்நிறுவனம், சமீபத்தில் இந்தியாவைச் சேர்ந்த 1,000 ஊழியர்களிடம் ஓர் ஆய்வை நடத்தியது. பணியிடத்தில் ஊழியர்களின் செயல்பாடுகள், பணிசார்ந்த முன்னேற்றம் குறித்த அவர்களது லட்சியங்கள், பணியைத் தக்கவைத்துக்கொள்வது தொடர்பான பிரச்சினைகள் ஆகியவை குறித்து அவர்களிடம் கேள்விகள் கேட்கப்பட்டன. 18 முதல் 50 வயது வரையிலான ஊழியர்களிடம் இந்த ஆய்வு நடத்தப்பட்டது. அதில் 47 சதவீதம் பேர் முழுநேர அலுவலகப் பணியைவிடவும் வீட்டிலிருந்தே பணி செய்ய விருப்பம் தெரிவித்திருக்கின்றனர்.

காரணம் என்ன?

கரோனா காலத்தில் வீட்டிலிருந்தே பணி எனும் முறைக்குப் பெரும்பாலான தனியார் நிறுவன ஊழியர்கள் மாறினர். பின்னர் தேவைப்படும் நேரத்துக்கு அலுவலகம் செல்வது, மற்ற நேரங்களில் வீட்டிலிருந்தே பணிபுரிவது என கலப்புப் பணி மாதிரிச் சூழலுக்கு மாறினர். கடந்த இரண்டு வருடங்களாக அந்தச் சூழலுக்கு அவர்கள் நன்றாகப் பழகிவிட்டனர்.

இந்தச் சூழலில், மீண்டும் வழக்கமான முழுநேர அலுவலகப் பணிக்குச் செல்வது குறித்த ஆர்வம் அவர்களிடம் குறைந்திருக்கிறது. இதைத்தான், ஹெச்.பி நிறுவனத்தின் சமீபத்திய ஆய்வு தெரிவிக்கிறது.

இந்த ஆய்வில் பங்கேற்ற ஊழியர்களில் பலர் கலப்புப் பணி மாதிரி தங்கள் உற்பத்தித் திறனை அதிகரித்திருப்பதாகவும், பணிகளை இலகுவாகச் செய்து முடிக்கும் சூழலை ஏற்படுத்தியிருப்பதாகவும் தெரிவித்திருக்கிறார்கள்.

இதுதொடர்பாகப் பேசிய, ஹெச்.பி இந்தியா மார்க்கெட் நிறுவனத்தின் நிர்வாக இயக்குநர் கேத்தன் படேல், “கலப்புப் பணி மாதிரிச் சூழல் இந்தியாவில் தொடரும் என்றே சொல்ல வேண்டும். பணியிடம் மற்றும் வீடு என சமன் செய்துகொள்ளும் வகையிலான சூழலுக்கு வழிவகுக்கும் கலப்புப் பணி மாதிரியை நிறுவனங்கள் மறு மதிப்பீடு செய்ய வேண்டும். உற்பத்தித் திறனை அதிகரிக்க, ஊழியர்களிடம் மனத் திருப்தி ஏற்படுகிறதா என்பதைக் கண்காணிக்க வேண்டும்” என்று கூறியிருக்கிறார்.

SCROLL FOR NEXT