திற்பரப்பு அருவியில் பெருக்கெடுத்து பாயும் வெள்ளம்
திற்பரப்பு அருவியில் பெருக்கெடுத்து பாயும் வெள்ளம்  
தேசம்

குமரியில் தொடர் மழை; மீனவர்கள் கடலுக்கு செல்லத் தடை: கரையோர மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை!

காமதேனு

குமரியில் கனமழை கொட்டித் தீர்த்து வருகிறது. தொடர் மழையின் காரணமாக திற்பரப்பு அருவியில் வெள்ளப் பெருக்கு ஏற்பட்டுள்ள நிலையில் குமரியில் கரையோர மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

கன்னியாகுமரி மாவட்டத்தில் கடந்த சில தினங்களாகவே சாரல் மழை பெய்துவந்தது. இந்நிலையில் நேற்று மாலை முதலே நல்ல மழை பெய்து வருகிறது. தொடர் மழையின் காரணமாக அணைகளின் நீர்மட்டமும் கணிசமாக உயர்ந்துள்ளது. மாவட்டத்தின் முக்கிய விவசாய ஜீவாதாரமான பேச்சிப்பாறை அணையில் இருந்து உபரிநீர் திறக்கப்பட்டுள்ளது. இதன் காரணமாக திற்பரப்பு அருவியில் வெள்ளப் பெருக்கு ஏற்பட்டுள்ளது. இதன் காரணமாக திற்பரப்பு அருவியில் சுற்றுலாப் பயணிகள் குளிக்கத் தடை விதிக்கப்பட்டுள்ளது.

இதேபோல் கோதையாறு, தாமிரபரணி ஆற்றின் தாழ்வான பகுதிகளில் வசிக்கும் மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. கன்னியாகுமரி கடல் பகுதியில் வளிமண்டல அடுக்கு உருவாகியிருப்பதால் கடலில் கடுமையான சூறைக்காற்று வீசும் எனவும் இதனால் மீனவர்கள் மீன்பிடிக்கச் செல்ல வேண்டாம் எனவும் மீன்வளத்துறை அதிகாரிகள் எச்சரிக்கை விடுத்து இருந்தனர்.

இன்றும், நாளையும் 45 முதல் 55 கிலோ மீட்டர் வேகம் வரை சூறைக்காற்று வீசும் எனவும் எச்சரிக்கப்பட்டிருந்ததால் ஆரோக்கியபுரம் முதல் நீரோடி வரையிலான 48 மீனவ கிராமங்களைச் சேர்ந்த மீனவர்களும் இன்று மீன்பிடிக்கச் செல்லவில்லை. இதன் காரணமாக ஏற்கெனவே மீன்பிடித் தொழிலுக்கு சென்றவர்களும் அவசர, அவசரமாக கரைத் திரும்பி வருகின்றனர்.

SCROLL FOR NEXT