மதுரை உயர் நீதிமன்றம்
மதுரை உயர் நீதிமன்றம்  
தேசம்

அனுமதி பெறாமல் சிலை வைக்கக்கூடாது: உயர் நீதிமன்றம் உத்தரவு

கி.மகாராஜன்

‘தமிழகத்தில் யாரும் அனுமதியில்லாமல் சிலை அமைக்கக்கூடாது. அதை அனுமதிக்கவும் கூடாது’ என உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

விருதுநகர் மாவட்டம், அம்மச்சியாபுரத்தில் அனுமதி பெறாமல் வைக்கப்பட்ட இமானுவேல் சேகரன் சிலையை அகற்றி பாதுகாப்பாக வைக்க உயர் நீதிமன்ற தனி நீதிபதி உத்தரவிட்டார். இந்த உத்தரவை ரத்து செய்யக்கோரி பாலசுப்பிரமணியன், உயர் நீதிமன்ற கிளையில் மேல்முறையீடு செய்தார்.  அதில், சிலை அமைக்கப்பட்டதும் நடைபெற்ற அமைதிப் பேச்சுவார்த்தையில் அனுமதி பெறும்வரை சிலையை சுற்றி தகரம் அமைத்து மறைத்து வைக்க முடிவு எடுக்கப்பட்டது. அதன்படி சிலை மறைக்கப்பட்டது. இதனால் சிலையை அகற்ற தேவையில்லை எனக் கூறப்பட்டிருந்தது. 

இந்த மனுவை நீதிபதிகள் ஆர்.மகாதேவன், ஜெ.சத்ய நாராயண பிரசாத் அமர்வில் விசாரணைக்கு வந்தது. அரசு வழக்கறிஞர் வாதிடுகையில், சிலை அமைக்கப்பட்டுள்ள பகுதியில் ஜாதி மோதல்கள் நடைபெற்றுள்ளன. அனுமதி பெறாமல் சிலை வைக்கப்பட்டுள்ளது. இதனால் தனி நீதிபதியின் உத்தரவை ரத்து செய்யக்கூடாது என்றார். 

இதையடுத்து நீதிபதிகள், சிலை அமைக்க அனுமதி கோரி மனுதாரர் அளித்த மனுவை அதிகாரிகள் நீண்டநாளாக நிலுவையில் வைத்திருப்பது ஏன்? இதனால் போலீஸார் தான் அதிக சிரமத்துக்கு ஆளாகின்றனர். முன்னாள் முதல்வர் கருணாநிதி சிலை அமைக்கவே நீதிமன்றம் அனுமதி வழங்கவில்லை. முறையாக அனுமதி பெற அறிவுறுத்தப்பட்டுள்ளது.  

தமிழகத்தில் முறையாக அனுமதி பெறாமல் யாரும் சிலை வைக்கக்கூடாது. அதை அனுமதிக்கவும் கூடாது. இதனால் மனுதாரர் அனுமதி பெறும் வரை சிலையை திறக்கக்கூடாது. அது தொடர்பாக மனுதாரர் பிரமாண பத்திரம் தாக்கல் செய்ய வேண்டும். விசாரணை நவ. 24-க்கு ஒத்திவைக்கப்படுகிறது என உத்தரவிட்டனர். 

SCROLL FOR NEXT