தேசம்

பெற்ற பிள்ளைகளை ஆற்றில் வீசிக்கொன்ற தந்தை: சர்க்கரை நோயால் மனமுடைந்த பெற்றோரும் தற்கொலை!

காமதேனு

தங்கள் செல்ல மகள்கள் இருவருக்கும் சர்க்கரை நோய் பாதிப்பு இருப்பதை அறிந்து மனமுடைந்த பெற்றோர் மகள்களை ஆற்றில் வீசிவிட்டு,  தாங்களும் ஆற்றில் குதித்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. 

சேலம் தாதகாப்பட்டியை சேர்ந்தவர்கள் யுவராஜ் (42) - மான்விழி (35) தம்பதியினர்.  இருவரும் சேலத்தில் உள்ள தனியார் டைல்ஸ் நிறுவனத்தில் கூலித் தொழிலாளர்களாக வேலை செய்து வந்தனர். இவர்களுக்கு நிதிஷா (7), அக்சரா  (5) என 2 மகள்கள். மூத்த மகள் நிதிஷா கடந்த 3 ஆண்டுகளாக சர்க்கரை நோயால் அவதிப்பட்டு வந்ததாக கூறப்படுகிறது. இதனால் தினமும் நிதிஷாவுக்கு இன்சுலின் ஊசி செலுத்தி வந்தனர். இந்த நிலையில் கடந்த 2 தினங்களுக்கு முன்பு இரண்டாவது  மகள் அக்சராவுக்கு உடல்நலம் பாதிக்கப்பட்டது.  மருத்துவமனைக்கு அழைத்துச் சென்று பரிசோதித்த போது  அவருக்கும் சர்க்கரை நோய் இருப்பது தெரிய வந்ததாம்.

ஏற்கெனவே பெரிய மகள் சர்க்கரை நோயால் பாதிக்கப்பட்டு இன்சுலின் ஊசி எடுத்துக் கொண்டுள்ள நிலையில்,  தற்போது இரண்டாவது மகளுக்கும் அதே பாதிப்பு ஏற்பட்டதை அறிந்த பெற்றோர் வேதனையில் ஆழ்ந்தனர். அதன்விளைவாக  வாழ பிடிக்காத இருவரும் குழந்தைகளுடன் தற்கொலை செய்து கொள்ளலாம் என்ற விபரீத முடிவை எடுத்தனர்.

இந்த நிலையில், குடும்பத்துடன் தற்கொலை செய்து கொள்வதாக ஒரு கடிதம் எழுதி வைத்துவிட்டு யுவராஜ், மான்விழி மற்றும் 2 மகள்களுடன் இருசக்கர வாகனத்தில் மேட்டூர் அடுத்த கொளத்தூருக்கு சென்றனர். அங்கிருந்து  கர்நாடக- தமிழக எல்லையில் உள்ள சின்ன காவல் மாரியம்மன் காவிரி ஆற்றின் நீர்தேக்க பகுதிக்கு மகள்களை அழைத்துச் சென்ற  யுவராஜ்,  அவர்கள் சற்றும் எதிர்பார்க்கிறாத நேரத்தில்  தனது  2 மகள்களையும் காவிரி ஆற்றில் தூக்கி வீசினார். 

இதில் 2 மகள்களும் தண்ணீரில் மூழ்கி பரிதாபமாக உயிரிழந்தனர். பின்னர் யுவராஜ், மான்விழி ஆகியோரும் ஆற்றில் குதித்து தற்கொலை செய்து கொண்டனர். சம்பவம் நடைபெற்ற இடம் ஈரோடு மாவட்டம் சென்னம்பட்டி வனத்துறையை சார்ந்தது என்பதால் பவானி கூடுதல் காவல் துணை கண்காணிப்பாளர் அமிர்தவர்ஷினி தலைமையில் வந்த காவல்துறையினர் பரிசல் மூலம் சென்று இறந்து போன நான்கு பேரின் சடலத்தையும் மீட்டு கரைக்கு கொண்டு வந்தனர்.

பின்னர் பிரேத பரிசோதனைக்காக அந்தியூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து சம்பவம் தொடர்பாக வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இந்த சம்பவம் அந்தப் பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி இருக்கிறது.

SCROLL FOR NEXT