ராமேஸ்வரம் கோயிலில் அமித் ஷா சாமி தரிசனம் 
தேசம்

அதிகாலையிலேயே ராமேஸ்வரம் கோயிலில் அமித் ஷா வழிபாடு... கலாம் நினைவிடத்திற்கும் செல்கிறார்!

காமதேனு

அண்ணாமலையின் பாதயாத்திரையை தொடங்கி வைக்க ராமேஸ்வரம் வந்திருந்த உள்துறை அமைச்சர் அமித் ஷா இன்று அதிகாலை ராமேஸ்வரம் கோயிலில் சாமி தரிசனம் செய்தார்.

ராமேஸ்வரம் கோயிலில் அமித் ஷா

பாஜக மாநில தலைவர் அண்ணாமலை ‘என் மண் என் மக்கள்’ என்ற பாதயாத்திரையினை நடத்துகிறார். இதன் தொடக்க விழா நேற்று இரவு ராமேஸ்வரத்தில் நடந்தது. ராமேஸ்வரத்தில் நடந்த இந்த நிகழ்ச்சியினை ஒட்டி நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் பங்கேற்ற உள்துறை அமைச்சர் அமித் ஷா உரையாற்றினார்.

இதனை தொடர்ந்து இரவு 8 மணிக்கு மேல் பொதுக்கூட்ட திடலின் முன் உள்ள சாலையில் பாதயாத்திரையினை அமித் ஷா கொடியசைத்து துவக்கி வைத்தார். இதனை தொடர்ந்து ராமேஸ்வரம் கோயில் வரை பாதையாத்திரை சென்ற அண்ணாமலை முதல் நாள் பாதயாத்திரையினை முடித்துக் கொண்டார். ராமேஸ்வரத்தில் உள்ள தனியார் தங்கும் விடுதியில் தங்கியிருந்த அமித் ஷா இரவில் கட்சியின் முக்கிய நிர்வாகிகளுடன் ஆலோசனையில் ஈடுபட்டார்.

இதனைத் தொடர்ந்து இன்று காலை ராமேஸ்வரம் ராமநாதசுவாமி கோயிலுக்கு சென்று அமித் ஷா சாமி தரிசனம் செய்தார். கோயில் சார்பில் அவருக்கு வரவேற்பு அளிக்கப்பட்டது. சாமி தரிசனம் முடித்த பின் முக்கிய பிரமுகர்கள் வருகை பதிவேட்டில் தனது வருகை குறித்து அமித் ஷா குறிப்பு எழுதினார். அமித் ஷா வின் வருகையினை தொடர்ந்து கோயிலுக்கு வந்திருந்த பக்தர்கள் கடும் சோதனைக்கு பின்னரே அனுமதிக்கப்பட்டனர்.

இதனை தொடர்ந்து பேய்க்கரும்பில் உள்ள முன்னாள் ஜனாதிபதி டாக்டர் அப்துல் கலாமின் தேசிய நினைவிடத்திற்கு செல்கிறார். அதனை தொடர்ந்து பேருந்து நிலையம் அருகில் உள்ள மீனவர் ஒருவரின் இல்லத்திற்கு செல்லவும் திட்டமிடப்பட்டுள்ளது. இதன் பின்னர் பாம்பன் குந்துகாலில் அமைந்துள்ள விவேகாநந்தர் நினைவு மண்டபத்தினை பார்வையிடுகிறார்.

இதனை தொடர்ந்து தனது ராமேஸ்வரம் பயணத்தை நிறைவு செய்யும் அமித் ஷா மண்டபம் சென்று அங்கிருந்து ஹெலிஹாப்டர் மூலம் மதுரை செல்கிறார்.

SCROLL FOR NEXT