தேசம்

சயனநிலையில் அருள்பாலிக்கும் ஆதிகேசவப் பெருமாள்: புராணப் பின்னணி என்ன?

என்.சுவாமிநாதன்

418 ஆண்டுகளுக்குப் பின்பு திருவட்டாறு ஆதிகேசவப் பெருமாள் கோயில் கும்பாபிசேகம் வரும் 6-ம் தேதி நடக்கிறது. ஆதிகேசவப் பெருமாள் ஆலயத்தின் அரிய தகவல்களைத் தொகுத்து, ‘ஆதிகேசவப் பெருமாள் ஆலயம் திருவட்டாறு கோயில் வரலாறு’ என்னும் புத்தகத்தை எழுதியவரும், வரலாற்று ஆய்வாளருமான அ.கா.பெருமாள் இந்த ஆலயத்தைக் குறித்தும், அதன் பின்னால் இருக்கும் புராணப் பின்னணிக் குறித்தும் காமதேனு வாசகர்களுக்காக பகிர்ந்துகொண்டார்.

அ.கா.பெருமாள்

“வைணவத்தில் 108 திவ்ய தேசங்கள் இருக்கின்றன. அதில் சோழநாட்டில் ஸ்ரீரங்கம் உள்பட 40 கோயில்களும், தொண்டை நாட்டில் 22 கோயில்களும், வடநாட்டுத் திருப்பதியாக 11 கோயில்களும், பாண்டியநாட்டுத் திருப்பதியாக 18 கோயில்களும் வருகின்றன. அந்தவரிசையில் மலைநாட்டுத் திருப்பதியில் வரும் 13 கோயில்களில் 12-வது கோயிலாக இருப்பது திருவட்டாறு ஆதிகேசவப் பெருமாள் கோயில். திருமங்கையாழ்வார், குலசேகர ஆழ்வார், நம்மாழ்வார் ஆகியோர் மலைநாட்டுக் கோயில்களைப் பற்றி பாடியிருக்கிறார்கள். அதில் நம்மாழ்வார் திருவட்டாறு ஆதிகேசவப் பெருமாளைக் குறித்து 11 பாடல்கள் பாடியிருக்கிறார்.

கடைசியாக இங்கு 1604-ம் வருடம் வேணாட்டு அரசர் ரவிவர்மா காலத்தில் கும்பாபிசேகம் செய்திருக்கிறார்கள். அதற்குப் பின் இப்போது தான் கும்பாபிசேகம் நடக்கிறது. 1604-ம் ஆண்டு நடந்த கும்பாபிசேகம் குறித்து, கோயில் வளாகத்திலேயே கல்வெட்டு ஒன்றும் இருக்கிறது” என்றவர் ஆலயத்தின் தலவரலாறு பற்றியத் தகவல்களை பேசத் தொடங்கினார்.

“மகாவிஷ்ணுவின் தசாவதாரங்கள் நமக்குத் தெரியும். அவைகள் மட்டுமே இல்லாமல் கூடுதலாக சில வடிவங்கள் எடுத்தார் மகா விஷ்ணு. குமரி மாவட்டத்தை உதாரணமாக எடுத்துக்கொண்டால் பறக்கை கிராமத்தில் நின்ற கோலத்திலும், திருப்பதி சாரத்தில் அமர்ந்த கோலத்திலும், திருவட்டாரில் சயனநிலையிலும் விஷ்ணு அருள்பாளிக்கிறார். பறக்கையில் மதுவாகிய அரக்கனை வென்றதால் மதுசூதனப் பெருமாள் என அருள்பாலிக்கிறார். அதேபோல்தான் திருவட்டாறில் கேசன் என்னும் அரக்கனையும், அவரது சகோதரியான கேசி என்னும் அரக்கியையும் வீழ்த்தினார். அதனால் தான் ஆதிகேசவப்பெருமாள் எனப் பெயர் வந்தது. கேசன் கொடூர அரக்கன். பிரம்மனை நோக்கி வழிபட்டு, பல வரங்களையும் பெற்று அதன்மூலம் பலம்பெற்றவன். ஆனால் அந்த பலத்தை ஆக்கப்பூர்வமாகப் பயன்படுத்தாமல் தேவர்கள், முனிவர்களையும் துன்புறுத்தினான்.

கோயிலின் மேற்கு வாசல்

அவனது சகோதரி கேசியோ இந்திரனின் அழகில் மயங்கி தன்னை மணக்கும்படிக் கேட்டார். இந்திரன் மறுத்ததால் சினம்கொண்ட கேசி, தன் அண்ணன் கேசனிடம் இந்திரன் தன்னை பல்வந்தமாக புனர முயன்றதாய் பொய் புகார்சொன்னாள். ஆனால் அதை உண்மை என நினைத்துக்கொண்ட கேசன், போரிட்டு இந்திரனை வீழ்த்தினான். போரில் தோல்வியுற்ற இந்திரன் ஓடிஒளிந்துகொண்டார். கேசன் பிரம்மனிடம் சாகாவரம் வாங்கியவன், இந்திரனால் அவனை எதுவும் செய்யமுடியவில்லை. இதனால் தன்னை இன்னும், இன்னும் உயர்வாக நினைத்துக்கொண்ட கேசன் தேவர்களையும், சூரிய, சந்திரன்களையும் அவமானம் செய்தான்.

இதை அறிந்த விஷ்ணு, கருடரின் மேல் ஏறி கேசனுடன் போரிட்டார். ஆனால் அவனை வீழ்த்த முடியவில்லை. அப்போதுதான் பராசக்தி, ‘கேசன் மரணமற்றவன். அவனைக் கொல்லமுடியாது. ஆதிசேஷன் (பாம்பு) கேசனைச் சுற்றி அணைகட்டட்டும். நீ அதன் மேல் சயனிப்பாய்!” என்று சொல்லியிருக்கிறார். அதன்படி தான் நாகப்பாம்பின் மேல் திருவட்டாறு ஆதிகேசவப் பெருமாள் சயனநிலையில் படுத்திருக்கிறார். இந்த பாம்புப் படுக்கையில் கீழே கேசன் என்னும் அரக்கன் இருப்பதாக ஐதீகம். கேசன் வெளியே வந்துவிடாதபடிக்குத்தான் பாம்பும், மூன்று சுற்றுகளாகச் சுற்றி உயரமாக இருக்கும்.

தன் அண்ணன் கேசன் பாம்பு படுக்கையின் கீழே அடைபட்டுக் கிடப்பதை அறிந்த கேசியால் அதைத்தாங்கிக் கொள்ள முடியவில்லை. கங்கையை நோக்கி வணங்கினாள். கங்கை இருகிளைகளாகப் பிரிந்து ஆதிகேசவனை அழிக்கவந்தன. இதைப்பார்த்த பூதேவி பரமன் இருந்த தலத்தை உயரும்படி அருளிச் செய்தார். இதனால் இருநதிகளாலும் பரமனை ஒன்றும் செய்ய இயலவில்லை. அந்த கேசியால் கொண்டுவரப்பட்ட இருபிரிவு நதிகளே இன்றும் குமரியில் ஓடிக்கொண்டிருக்கும் கோதையாறாகவும், பறளியாறாகவும் ஆகியது என்பது ஐதீகம். இதை வெறுமனே புராணக்கதை எனக் கடந்து போய்விட முடியாது. இன்றும் திருவட்டாறில் இந்த ஆலயம் மட்டும் தரைமட்டத்தில் இருந்து 16 அடி உயரத்தில் இருக்கிறது. இத்தனைக்கும் இங்கு பாறைகள் இல்லை. இதன் கட்டுமானப் பணிகளின்போதே கல்லையும், மண்ணையும் கொண்டுவந்து குவித்திருக்கவேண்டிய தேவையும் இல்லை. இப்போதும் திருவட்டாறைச் சுற்றி ஆறாகத்தான் ஓடுகிறது. அந்த ஊருக்குள் ஒரு சுற்று, சுற்றி வந்தாலே இதைப் பார்க்கமுடியும். இந்த இடத்தில்தான் கேசியின் வேண்டுதலால் தண்ணீர் வந்ததையும், மகா விஷ்ணு இருக்கும் இடம் உயர்ந்ததையும் பொருத்திப் பார்க்கிறேன்.”என்று அவர் சொல்ல, சொல்ல ஆச்சர்யம் மேல் எழுகிறது.

பதினொன்றாம் நூற்றாண்டிலேயே இந்த கோயில் கட்டப்பட்டிருக்கலாம் என்பது அ.கா.பெருமாளின் கணிப்பு. அதைப்பற்றியும் தொடர்ந்து பேசியவர், “சுவாதி திருநாள் மகாராஜா காலத்தில் கோயில் சுற்றுச்சுவர் விளக்கு தீப்பிடித்து எரிந்ததால் கலசபூஜை செய்திருக்கிறார்கள். 19-ம் நூற்றாண்டில் கோயிலில் ஒரு திருட்டு நடந்திருக்கிறது. அதனால் தீட்டு கழிப்பு பூஜையும் நடந்தது. இருந்தும் இந்த ஆலய கும்பாபிசேகம் மிகவும் அரிதிலும், அரிய நிகழ்வு. நம்மாழ்வார் காலத்தில் திருவட்டாறு ஆதிகேசவப் பெருமாள் கோயில் மிகவும் சின்ன ஆலயமாகவே இருந்திருக்கிறது. ஆலயத்திற்குள் 51 கல்வெட்டுகள் இருக்கின்றன. தமிழ் கிரந்த வட்டெழுத்து வடிவில் அவை உள்ளன”என்றும் தகவல்களை எடுத்துவைத்தார் அ.கா.பெருமாள்.

12 ஆண்டல்ல... 12 தலைமுறை!

அ.கா.பெருமாள் எழுதிய ஆதிகேசவப் பெருமாள் ஆலயம் திருவட்டாறு கோயில் வரலாறு” என்னும் புத்தகம், இந்த ஆலயத்தின் தொன்மங்களைப் பேசும் முக்கிய சமகாலச் சான்று. திருவட்டாறு ஆதிகேசவப் பெருமாள் கோயிலில் கும்பாபிசேகம் நடத்தவேண்டும் என்ற திருவட்டாறு பகுதி வைணவப் பக்தர்களின் கோரிக்கையை 32 பக்க அறிக்கையாக்கி அறநிலையத்துறை அதிகாரிகளிடம் கடந்த 2006-ம் ஆண்டு சமர்பித்தார் அ.கா.பெருமாள். அந்த அறிக்கையைப் படித்த அறநிலையத்துறை அதிகாரிகள் இந்த ஆலயத்தின் அரிய வரலாற்றைத் தொகுக்க கொடுத்த தூண்டுதலே புத்தகமானது. 12 ஆண்டுகளுக்கு ஒருமுறை ஆகமவிதிப்படி கும்பாபிசேகம் நடத்தலாம். ஆனால் 12 தலைமுறைகளுக்குப் பின்பு,

இந்த ஆலயத்தில் நடக்கும் கும்பாபிசேகத்தின் பின்னால் ஊர் மக்கள் ஒருசேர எழுப்பிய கோரிக்கைக் குரலும், அந்த மனுவின் பின்னால் உதயமான புத்தகம் பேசிய தொன்மமும் முக்கியமானவை!

SCROLL FOR NEXT