தேசம்

டாஸ்மாக் மூடப்பட்ட பிறகு பொதுஇடத்தில் மது அருந்துவதை தடுக்க வேண்டும்'- தமிழக அரசுக்கு நோட்டீஸ்

காமதேனு

டாஸ்மாக் மதுபானக் கடைகள் மற்றும் பார்கள் மூடப்பட்ட பிறகு பொது இடங்களில் மது அருந்துவதை தடுக்கக் கோரிய வழக்கில் தமிழக அரசு, டாஸ்மாக் நிர்வாகம் ஆகியோர் பதிலளிக்க சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

திருவள்ளூர் மாவட்டம், வெங்கத்தூரை சேர்ந்த மோகன், கோபிநாத் ஆகியோர் சென்னை உயர் நீதிமன்றத்தில் மனு ஒன்றை  தாக்கல் செய்துள்ளனர். அந்த  மனுவில், ``தினமும் இரவு 10 மணிக்கு மதுபானக் கடை மற்றும் பார் ஆகியவை மூடப்படுவதால், மூடும் நேரத்தில் மதுபானம் வாங்குபவர்கள், மதுபானக் கடை முன்பும், சாலையோரத்திலும், அருகில் உள்ள பொது இடங்களிலும் அமர்ந்து மது அருந்திவிட்டு கண்ணாடி பாட்டில்கள் மற்றும் பிளாஸ்டிக் கப்புகளை பொது இடங்களிலும், கால்வாய்களிலும் வீசி செல்கின்றனர்.

இதுதவிர, சுற்றுப்புறத்தையும்  அசுத்தப்படுத்திவிட்டு செல்வதால் சுகாதார சீர்கேடு ஏற்படுகிறது. அதுமட்டுமில்லாமல்  தனியாக செல்பவர்களுக்கு எதிராகவும், பெண்களுக்கு எதிராகவும்  குற்றங்கள் நடக்கிறது. 2003-ம் ஆண்டு உருவாக்கப்பட்ட மதுபான சில்லறை விற்பனை விதிகளின்படி காலை 8 மணி முதல் நள்ளிரவு 12 மணி வரை மதுபான கடைகளை திறந்து வைக்கலாம் என அனுமதிக்கப்படுகிறது. 

மதுபானம் வாங்குபவர்கள் அதை அருந்துவதற்கு பார்கள் இயங்கும் நேரங்களை மாற்றம் செய்தால் பொது இடங்களில் நடக்கும் குற்றங்களை தடுக்கலாம் என டிசம்பர் 9-ம் தேதி தமிழக மதுவிலக்கு துறை மற்றும் டாஸ்மாக் நிர்வாகத்திற்கு மனு அளித்தும் இதுவரை நடவடிக்கை எடுக்கவில்லை. எனவே டாஸ்மாக் மதுபானக் கடைகள் மற்றும் பார்கள் மூடப்பட்ட பிறகு பொதுஇடங்களில் மது அருந்துவதை தடுத்து, நெறிமுறைப் படுத்தும் வகையில் அரசுக்கு உத்தரவிட வேண்டும்'' என கேட்டுக் கொண்டுள்ளனர். இந்த வழக்கு பொறுப்புத் தலைமை நீதிபதி டி.ராஜா, டி.பரத சக்ரவர்த்தி ஆகியோர் அடங்கிய அமர்வில் இன்று விசாரணைக்கு வந்தபோது, வழக்கு குறித்து தமிழக அரசும், டாஸ்மாக் நிர்வாகமும் பதிலளிக்க உத்தரவிட்டு வழக்கு விசாரணையை ஜனவரி 4-ம் தேதிக்கு தள்ளி வைத்தனர்.

SCROLL FOR NEXT