தேசம்

தமிழகத்தில் அடுத்த 5 நாட்கள் இடி, மின்னலுடன் கனமழை: வானிலை ஆய்வு மையம் அறிவிப்பு

காமதேனு

தமிழகத்தில் அடுத்த 5 நாட்களுக்கு இடி, மின்னலுடன் கூடிய கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக தென்மண்டல வானிலை ஆய்வு மையத்தலைவர் கே.பாலச்சந்திரன் கூறினார்.

தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை அக். 29ம் தேதி தொடங்கியது. இதையடுத்து தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் பரவலாக கனமழை தொடர்ந்து பெய்து வருகிறது. இதனால் ஏரிகள், அணைகள் நிரம்பி வருகின்றன. இந்நிலையில் வங்கக்கடல் பகுதியில் உருவான காற்றழுத்த தாழ்வு பகுதி ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு நிலையாக இன்று வலுப்பெற்றுள்ளது.

இந்நிலையில், தென்மண்டல வானிலை ஆய்வு மையத் தலைவர் கே.பாலச்சந்திரன் செய்தியாளர்களிடம் இன்று கூறுகையில், “தென்மேற்கு வங்கக் கடலில் நிலவி வந்த காற்றழுத்த தாழ்வு பகுதி வலுப்பெற்று உள்ளது. கடந்த 24 மணி நேரத்தில் மயிலாடுதுறை, கொள்ளிடத்தில் 13 சென்டி மீட்டர் மழை பதிவாகியுள்ளது. கடலூர் மற்றும் டெல்டா மாவட்டங்களில், ஓரிரு இடங்களில் அதி கனமழைக்கு வாய்ப்புள்ளது.

அத்துடன் மேற்கு தொடர்ச்சி மலையை ஒட்டியுள்ள மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளது. சென்னை மற்றும் புறநகர் பகுதியில் அடுத்து வரும் மூன்று நாட்களுக்கு மழை தொடரும். 40 முதல் 45 கிலோமீட்டர் வேகத்தில் காற்றின் வேகம் இருக்கும். சென்னை நுங்கம்பாக்கத்தில் 7 சென்டி மீட்டர் மழை பதிவாகியுள்ளது. வடகிழக்கு பருவமழை தொடங்கியது முதல் இன்று வரை 247 மில்லி மீட்டர் பழை பதிவாகியுள்ளது. இது இயல்பைவிட 3 சதவீதம் குறைவு. சென்னையில் பதிவான அளவு 509 மில்லி மீட்டர். இது இயல்பை விட 20 சதவீதம் அதிகம். காஞ்சிபுரம், ராணிப்பேட்டை, திருவள்ளூர் மாவட்டங்களுக்கு கொடுக்கப்பட்டு இருந்த ரெட் அலர்ட் திரும்ப பெறப்படுகிறது” என்றார்.

மேலும் நவம்பர் 11-ம் தேதி முதல் 15-ம் தேதி வரை தமிழகம், புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஒருசில இடங்களில் இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழைக்கும், பல இடங்களில் கனமழைக்கும் வாய்ப்பு உள்ளது" என்றார்.

SCROLL FOR NEXT