தேசம்

அடுத்த 24 மணி நேரத்திற்குத் தமிழகம் மற்றும் புதுவைக்கு முக்கிய அறிவிப்பு

காமதேனு

அடுத்த 24 மணி நேரத்திற்குத் தமிழகம் மற்றும் புதுவையில் ஓரிரு இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என்று வானிலை ஆய்வு மைய தென்மண்டல தலைவர் பாலச்சந்திரன் தெரிவித்துள்ளார்.

தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தீவிரமடைந்துள்ள நிலையில் பல்வேறு இடங்களில் பரவலாக மழை பெய்து வருகிறது. இந்நிலையில் அடுத்த சில தினங்களுக்கு மழை குறித்தான தகவல்களை வானிலை ஆய்வு மைய தென்மண்டல தலைவர் பாலச்சந்திரன் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து அவர் கூறுகையில், “அந்தமான் கடல் பகுதியில் உருவாகியுள்ள குறைந்த காற்றழுத்தத் தாழ்வுப் பகுதி மேற்கு வடமேற்கு திசையில் நகர்ந்து நாளை குறைந்த தாழ்வழுத்த மண்டலமாக வலுப்பெறக் கூடும். இது தொடர்ந்து தமிழகம், புதுவை, தெற்கு ஆந்திரக் கடலோரப் பகுதிகளை நோக்கி நகரக் கூடும். கடந்த 24 மணி நேரத்தில் தமிழகம், புதுவை, காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் மழை பெய்துள்ளது. அதிகபட்சமாகத் தென்காசி மாவட்டத்தில் உள்ள செங்கோட்டையில் 9 செ.மீ பதிவாகியுள்ளது. வானிலை முன்னறிவிப்பைப் பொறுத்தவரையில் அடுத்த 24 மணி நேரத்திற்குத் தமிழகம் மற்றும் புதுவையில் ஓரிரு இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.

நவ.20-ம் தேதி தமிழக கடலோரப் பகுதிகளில் மிதமான மழை பெய்யக் கூடும். 21 மற்றும் 22-ம் தேதிகளில் கடலோரப்பகுதிகளிலும், உள்மாவட்டங்களில் ஒரு சில இடங்களிலும் மிதமான மழை பெய்யக் கூடும். உள்மாவட்டங்களில் நவம்பர் 21 மற்றும் 22 ஆகிய தேதிகளில் திருவள்ளூர் முதல் நாகப்பட்டினம் வரையிலான கடலோர மாவட்டங்கள் மற்றும் டெல்டா மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்வதற்கான வாய்ப்பு உள்ளது. மீனவர்களை பொறுத்தவரையில் 18-ம் தேி அந்தமான் கடல்பகுதி மற்றும் தெற்கு வங்கக்கடல் பகுதி 19-ம் தேதி தென்மேற்கு வங்கக் கடல் பகுதிகள் மற்றும் மத்திய வங்கக் கடல் பகுதிகள், 20 மற்றும் 21-ம் தேதி தமிழக கடலோர பகுதிகள் மற்றும் தெற்கு ஆந்திர கடலோர பகுதிகளில் மணிக்கு 40 முதல் 45 கிமீ வேகத்தில் வீசக்கூடும் என்பதால் மீனவர்கள் இப்பகுதிகளுக்குச் செல்ல வேண்டாம் என்று அறிவுறுத்தப்படுகிறது ” என்றார்.

SCROLL FOR NEXT