தேர்வு -சித்தரிப்புக்கானது
தேர்வு -சித்தரிப்புக்கானது 
தேசம்

வினாத்தாள் கசிவு குற்றத்தில் ஈடுபடுவோருக்கு 10 ஆண்டு சிறை; ரூ.1 கோடி அபராதம்!

காமதேனு

அரசுப் பொதுத்தேர்வுகளின் வினாத்தாள் கசிவு குற்றத்தில் ஈடுபடுவோருக்கு 10 ஆண்டுகள் சிறை தண்டனை மற்றும் ரூ.1 கோடி அபராதம் விதிக்கும் அதிரடி சட்டத்தை குஜராத் மாநில அரசு ஏகமனதாக நிறைவேற்றி உள்ளது.

ஜன.29 அன்று குஜராத்தில் பஞ்சாயத்து ஜூனியர் கிளர்க் பதவிக்கான தேர்வு நடைபெறுவதாக திட்டமிடப்பட்டிருந்தது. சுமார் 9.50 லட்சம் தேர்வர்கள் பங்கேற்பதாக இருந்த அந்த அரசுத் ஆள்சேர்ப்புக்கான தேர்வு, அன்றைய தினம் காலையில் திடீரென ஒத்திவைக்கப்பட்டதாக அறிவிக்கப்பட்டது. வினாத்தாள் கசிவு தொடர்பான புகார் உறுதி செய்யப்பட்டதை அடுத்து தேர்வினை ஒத்திவைத்து மாநில அரசு அறிவிக்க வேண்டியதாயிற்று.

மாநிலம் நெடுக சுமார் 3000 தேர்வு மையங்களில் குவிந்த தேர்வர்கள் மற்றும் அவர் சார்ந்தோர் மத்தியில் இதனால் கொதிப்பு ஏற்பட்டது. காரணம், கடந்த 10 ஆண்டுகளில் 15க்கும் மேலான அரசு தேர்வுகளில் வினாத்தாள் கசிவு தொடர்பான புகார்கள், குஜராத் மாநிலத்துக்கு அவப்பெயர் தந்துள்ளன. எனவே ஜன.29 தேர்வு ஒத்திவைப்பு அறிவிப்பினூடே, வினாத்தாள் கசிவுக்கு எதிராக பிரத்யேக சட்டம் கொண்டுவரப்படும் என மாநில அரசு அறிவித்தது.

அதன்படி அரசுப் பொதுத்தேர்வு மற்றும் போட்டித் தேர்வுகளின் வினாத்தாள் கசிவு குற்றத்தில் ஈடுபடுவோர் மீது கடும் நடவடிக்கை எடுக்க வழிவகை செய்யும் புதிய சட்ட மசோதா தற்போது குஜராத் சட்டப்பேரவையில் ஏகமனதாக நிறைவேற்றப்பட்டுள்ளது. அதிகபட்ச தண்டனையாக ரூ.1 கோடி அபராதம் மற்றும் 10 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கவும் இந்த புதிய சட்டம் வழி செய்யும். புதிய சட்டத்தின் மூலம் குஜராத்தை உலுக்கி வரும் வினாத்தாள் கசிவு பிரச்சினை ஒரு முடிவுக்கு வரும் என மாநில அரசு நம்பிக்கை தெரிவித்துள்ளது.

SCROLL FOR NEXT