தேசம்

கேரள அரசின் நடவடிக்கையால் அரசுப்பள்ளி ஆசிரியர்கள் ஷாக்!

என்.சுவாமிநாதன்

ஒற்றை ஆசிரியர் பள்ளிக்கூடங்கள் அனைத்தையும் மூடியிருக்கும் கேரள அரசு, அங்கு பணி செய்த ஆசிரியர்களை தூய்மைப் பணியாளர்களாக நியமித்திருக்கிறது. இது கேரளத்தின் கல்வியாளர்கள் மத்தியில் கடும் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.

கேரளத்தில் வித்யா தன்னார்வலர் திட்டத்தின் கீழ் பள்ளிக்கூடங்கள் இல்லாத மலைப் பகுதிகளிலும், குக்கிராமங்களிலும் ஓராசிரியர் பள்ளிக்கூடங்கள் ஏற்படுத்தப்பட்டன. தற்காலிகமாக இங்கு ஆசிரியர்கள் நியமிக்கப்பட்டு வகுப்புகள் நடந்துவந்தன. இந்நிலையில், நடப்பு கல்வியாண்டில் ஓராசிரியர் பள்ளிகளில், 272 பள்ளிகளை கேரள அரசு மூடியுள்ளது. அந்தப் பள்ளிகளில் ஆசிரியராக இருந்த பலரையும், அருகிலுள்ள அரசுப்பள்ளிகளில் பகுதிநேர, முழுநேர தூய்மைப் பணியாளர்களாக நியமித்துள்ளது. கல்வித்துறையில் இருபது ஆண்டுகளுக்கும் மேல் அனுபவம் உள்ளோருக்கும் இந்த வேலையே வழங்கப்பட்டிருக்கிறது.

மூடப்பட்ட ஓராசிரியர் பள்ளிகளில் படித்த மாணவர்களை அருகிலுள்ள அரசுப்பள்ளிகளுக்கு மாற்றியுள்ளது அரசு. அங்கேயே மாணவர்கள் தங்கிப்படிக்க விடுதி வசதியும் ஏற்படுத்தப் பட்டுள்ளது. மூடப்பட்ட பள்ளிகளை தவிர இப்போது கேரளத்தில் 27 ஓராசிரியர் பள்ளிகள் மட்டுமே உள்ளன. ஆசிரியர்களின் கல்வித் தகுதியைப் பொருட்படுத்தாமல் அவர்களை பள்ளிக் கூடங்களில் தூய்மைப் பணியாளர்களாக நியமித்திருக்கும் கேரள அரசின் நடவடிக்கை கேரள கல்வியாளர்கள் மத்தியில் கடும் அதிருப்தியை ஏற்படுத்தி உள்ளது.

SCROLL FOR NEXT