தேசம்

அயோத்தியில் அரசு நிலம் ஆக்கிரமிப்பு: பாஜக எம்எல்ஏ, நகர மேயருக்குத் தொடர்பா?

ஆர். ஷபிமுன்னா

பிரம்மாண்டமான ராமர் கோயில் கட்டப்பட்டுவரும் அயோத்தியில் அரசு நிலம் ஆக்கிரமிக்கப்பட்டதாகப் புகார் எழுந்துள்ளது. இப்புகாரில், பாஜகவின் நகர மேயர் ரிஷிகேஷ் உபாத்யா, வேத் பிரகாஷ் குப்தா எம்எல்ஏவின் உள்ளிட்டோரின் பெயர்களும் இடம்பெற்றிருப்பது பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது.

பாபர் மசூதி-ராமர் கோயில் மேல்முறையீட்டு வழக்கு தீர்ப்பின் அடிப்படையில் அயோத்தியில் ராமர் கோயில் கட்டப்பட்டு வருகிறது. இதனால், அம்மாவட்டம் முழுவதிலும் உள்ள நிலங்கள் முக்கியத்துவம் பெற்று பல மடங்கு விலை அதிகமாக விற்கப்படுகின்றன. இந்தவகையில், அயோத்தியின் சரயு நதிக்கரைப் பகுதியிலும் பல நிலங்கள் வீட்டு மனைகளாகி விற்பனையில் உள்ளன. இவற்றிலும் பல ஆக்கிரமிக்கப்பட்ட அரசு நிலங்கள் எனப் புகார்கள் கிளம்பின.

இதுதொடர்பாக, அயோத்தியின் முன்னாள் பாஜக எம்எல்ஏவான லாலுசிங், முதல்வர் யோகி ஆதித்யநாத்திற்குக் கடிதம் எழுதினார். அதில், இந்த நிலஆக்கிரமிப்பு மீது சிறப்புப் புலானாய்வு படையின் விசாரணை அமைக்கவும் கோரியிருந்தார்.

இதையடுத்து முதல்வர் யோகி அறிவுறுத்தலின் பேரில் அயோத்தி வளர்ச்சி ஆணையத்தின் அதிகாரிகள் அங்கு ஆய்வு நடத்தினர். இதில், அரசு நிலங்களும் பலவந்தமாக ஆக்கிரமிக்கப்பட்டு விற்பனை செய்யப்பட்டுவருவது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

இது குறித்து அயோத்தி வளர்ச்சி ஆணையத்தின் செயலாளர் விஷால்சிங் கூறும்போது, “இதுவரையும் 40 காலனிகள் ஆக்கிரமிப்பு நிலத்தில் உருவாகியிருப்பதைக் கண்டுபிடித்துள்ளோம். இந்தக் கட்டிடங்களை இடிக்க உள்ளோம். இந்த விவாகரத்தில் சம்மந்தப்பட்டவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும்” எனத் தெரிவித்தார்.

இவற்றில் அரசு நிலம் எவை என்ற பட்டியலையும் நேற்று அயோத்தி வளர்ச்சி ஆணையம் வெளியிட்டிருந்தது. தற்போது இந்த நிலஆக்கிரமிப்பில் அயோத்தியின் ஆளும் பாஜகவினரின் பலரது பெயர்களும் வெளியாகி உள்ளன.

இதில், நகர பாஜக மேயர் ரிஷிகேஷ் உபாத்யா, நகர எம்எல்ஏவான வேத் பிரகாஷ் குப்தா, முன்னாள் பாஜக எம்எல்ஏவான கோரக்நாத் பாபா உள்ளிட்டோர் பெயர்கள் இடம் பெற்றுள்ளன.

இவர்கள் அனைவரது வீடுகளிலும் நேற்று இரவு முதல் உத்தர பிரதேச போலீஸார் அதிரடி சோதனை நடத்திவருகின்றனர். அயோத்தியில் பாஜகவினர் தொடர்பாக நிலப்புகார்கள் எழுவது இது முதல் முறையல்ல.

தனியாரிடம் நிலங்களை சில லட்சங்களுக்கு பெற்று அடுத்த சில நிமிடங்களில் அவற்றை கோயில் கட்டுவதற்காக என ராமஜென்மபூமி அறக்கட்டளையினரிடம் பல கோடி ரூபாய்க்கு விற்றதாக உள்ளூர் பாஜகவினர் சிலர் மீது குற்றச்சாட்டு எழுந்தது குறிப்பிடத்தக்கது.

SCROLL FOR NEXT