தேசம்

பாம்பன் பாலத்தில் நேருக்கு நேர் மோதல்; அப்பளம் போல் நொறுங்கிய அரசுப் பேருந்துகள்: காயத்துடன் தப்பிய பயணிகள்!

காமதேனு

பாம்பன் பாலத்தில் இரண்டு அரசு பேருந்துகள் நேருக்கு நேர் மோதிக் கொண்ட விபத்தில் பயணிகள் 20 பேர் காயமடைந்தனர். இந்த விபத்தில் பேருந்துகளின் முன்பகுதி அப்பளம் போல் நொறுங்கியது.

ராமநாதபுரம் மாவட்டம், பாம்பன் பாலத்தில் அடிக்கடி விபத்துக்கள் நடைபெற்று வருகிறது. கடந்த வாரம் இரண்டு தனியார் பேருந்துகள் மோதிக்கொண்ட விபத்தில் பயணிகள் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினர். இந்த விபத்தில் பேருந்து ஒன்று சாலையோர தடுப்பில் மோதி நின்றதால் கடலில் விழாமல் தப்பியது. இதனால் பெரும் விபத்து தவிர்க்கப்பட்டது. பொதுமக்கள் உதவியுடன் பேருந்து கயிறு கட்டி மீட்கப்பட்டது. இந்த விபத்து நடந்துள்ள நிலையில், காவல்துறையினர் எந்தவித முன்னெச்சரிக்கை நடவடிக்கையும் எடுக்கவில்லை என்று தெரிகிறது.

ராமேஸ்வரத்தில் சில நாட்களாக கனமழை பெய்து வருகிறது. இதனால் சாலைகளில் தண்ணீர் ஓடுவதால் பாம்பன் பாலத்தில் வாகனங்கள் மெதுவாக செல்லும் நிலை ஏற்படுகிறது. இன்று அதிகாலை பாம்பன் பாலத்தில் பெரும் விபத்து ஏற்பட்டு இருக்கிறது. ராமநாதபுரம் நோக்கி சென்ற அரசு பேருந்தும் திருச்சியில் இருந்து ராமேஸ்வரம் நோக்கி சென்ற அரசு பேருந்தும் பாம்பன் பாலத்தில் நேருக்கு நேர் மோதிக் கொண்டது. ஓட்டுநர்களின் கட்டுப்பாட்டு இழந்து பேருந்துகள் மோதிக்கொண்டதில் 20 பயணிகள் காயம் அடைந்தனர். மோதிய வேகத்தில் பேருந்து முன்பகுதி அப்பளம் போல் நொறுங்கியது. அதிர்ஷ்டவசமாக பேருந்து ஓட்டுநர்கள் உயிர் தப்பினர்.

தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு காவல்துறையினர் விரைந்து வந்து படுகாயம் அடைந்தவர்களை மீட்டு அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர். இந்த விபத்து குறித்து காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர். பாம்பன் பாலத்தில் மழையால் தண்ணீர் பெருக்கெடுத்து ஓடியதால் பேருந்து கட்டுப்பாட்டை இழந்து விபத்து ஏற்பட்டிருக்கலாம் என்று முதல்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது. அதே நேரத்தில் பாம்பன் பாலத்தில் அடிக்கடி விபத்து நடப்பது பொது மக்களை அச்சத்தில் ஆழ்த்தி வருகிறது. பாலத்தில் தடுப்பு சுவர் இருப்பதால் விபத்தில் சிக்கும் பேருந்துகள் கடலுக்குள் விழும் அபாயம் தடுக்கப்படுகிறது. விபத்து ஏற்படாமல் இருக்க முன்னெச்சரிக்கை நடவடிக்கையை தமிழக அரசு எடுக்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.

SCROLL FOR NEXT