தேசம்

கூகுள் இந்தியா கொள்கைப் பிரிவுத் தலைவர் ராஜினாமா: காரணம் சொல்லாததால் சர்ச்சை!

காமதேனு

கூகுள் இந்தியா கொள்கைப் பிரிவுத் தலைவராகப் பொறுப்பு வகித்த அர்ச்சனா குலாட்டி, திடீரென தனது பதவியை ராஜினாமா செய்திருக்கிறார்.

டெல்லி ஐஐடி-யில் பொருளாதாரப் பட்டப் படிப்பும், முனைவர் பட்டமும் பெற்ற அர்ச்சனா குலாட்டி, பல்வேறு அரசுத் துறைகளில் பணியாற்றிய அனுபவம் கொண்டவர், 2017 மே முதல் 2019 ஆகஸ்ட் வரை தொலைத்தொடர்புத் துறைச் செயலாளர் அலுவலகத்தில் சிறப்பு அதிகாரியாகப் பணியாற்றினார். பின்னர் நிதி ஆயோக்கின் டிஜிட்டல் கம்யூனிகேஷன்ஸ் பிரிவின் இணைச் செயலாளராகப் பதவிவகித்தார். 2021 மார்ச் மாதம் அவர் விருப்ப ஓய்வு பெற்றார். அதன் பின்னர் தனியார் நிறுவனங்களுக்காகச் சுயாதீனமாக வேலை பார்த்துவந்தார். பின்னர் 2022 மே மாதம் கூகுள் நிறுவனத்தில் சேர்ந்தார். அந்நிறுவனத்தில், அரசு விவகாரங்கள் மற்றும் பொதுக் கொள்கைகள் பிரிவின் தலைவராகப் பதவிவகித்தார்.

இந்நிலையில், அவர் தனது பதவியை ராஜினாமா செய்துவிட்டதாகத் தகவல் வெளியாகியிருக்கிறது. இந்தியப் போட்டி ஆணையத்திலும் அர்ச்சனா பணியாற்றியிருக்கிறார். அந்த ஆணையம், ஸ்மார்ட் டிவி சந்தை, ஆண்ட்ராய்டு ஆபரேட்டிங் சிஸ்டம் உள்ளிட்ட கூகுள் நிறுவனத்தின் வணிகச் செயல்பாடுகளைக் கண்காணிக்கும் பணியில் ஈடுபட்டுவருகிறது. இந்தப் பின்னணியில், அவரது ராஜினாமா குறித்து பல்வேறு சந்தேகங்கள் எழுந்திருக்கின்றன.

இதுதொடர்பான கேள்விகளுக்கு அர்ச்சனா குலாட்டியும், கூகுள் நிறுவனமும் இதுவரை விளக்கம் அளிக்கவில்லை.

SCROLL FOR NEXT