தங்கம் விலை நிலவரம் மத்திய பட்ஜெட் 2023
தங்கம் விலை நிலவரம் மத்திய பட்ஜெட் 2023 தங்கத்துக்கு இறக்குமதி வரி அதிகரிப்பு - டிவி,செல்போன் விலை குறையும்: மத்திய பட்ஜெட்டில் அறிவிப்பு!
தேசம்

தங்கத்துக்கு இறக்குமதி வரி அதிகரிப்பு - டிவி,செல்போன் விலை குறையும்: மத்திய பட்ஜெட்டில் அறிவிப்பு!

காமதேனு

தங்கம், வெள்ளி மற்றும் பிளாட்டினத்துக்கான இறக்குமதி வரி அதிகரிக்கப்படும் என மத்திய அமைச்சர் நிர்மலா சீதாராமன் தனது பட்ஜெட் உரையின்போது தெரிவித்தார். செல்போன், டிவி போன்றவற்றின் உதிரிபாகங்களின் இறக்குமதி வரி குறைக்கப்பட்டுள்ளதால், அவற்றின் விலை குறைய வாய்ப்புள்ளது.

இந்திய குடியரசு தலைவர் திரௌபதி முர்மு உரையுடன் நாடாளுமன்ற கூட்டத்தொடர் நேற்று தொடங்கியது. இதன் தொடர்ச்சியாக 2023-24-ம் நிதியாண்டுக்கான நிதிநிலை அறிக்கையை மத்திய நிதியமைச்சா் நிா்மலா சீதாராமன் மக்களவையில் தாக்கல் செய்து வருகிறார்.

பட்ஜெட்டில் குறிப்பிடப்பட்டுள்ள முக்கிய அம்சங்கள்: புதிய வரிமுறையில் உள்ளவர்களுக்கு ஆண்டுக்கு மொத்த வருமானம் 7 லட்சம் வரை வருமான வரி கிடையாது. ஏற்கெனவே 5 லட்சம் ரூபாயாக இருந்த வரம்பு தற்போது 7 லட்சம் ரூபாயாக உயர்த்தப்பட்டுள்ளது. புகையிலை பொருட்களுக்கான வரி 16 சதவீதம் அதிகரிக்கப்பட்டுள்ளது. தங்கம் வெள்ளி பிளாட்டினம் போன்றவற்றுக்கான இறக்குமதி வரி அதிகரிக்கப்பட்டுள்ளது. செல்போன் உற்பத்தியை ஊக்குவிக்க, செல்போன் கேமரா லென்ஸ் போன்ற அதன் உதிரிபாகங்களின் இறக்குமதிக்கு வரிவிலக்கு அளிக்கப்படுகிறது. தொலைக்காட்சி பேனல்கள் மற்றும் உதிரிபாகங்களுக்கான இறக்குமதி வரி குறைக்கப்பட்டுள்ளது. கிச்சன் சிம்னிக்கு இறக்குமதி வரி அதிகரிக்கப்பட்டுள்ளது என்பது உள்ளிட்டவை அறிவிக்கப்பட்டுள்ளது. செல்போன், டிவி போன்றவற்றின் உதிரிபாகங்களின் இறக்குமதி வரி குறைக்கப்பட்டுள்ளதால், அவற்றின் விலை குறைய வாய்ப்புள்ளது. தங்கத்துக்கான இறக்குமதி அதிகரிக்கப்பட்டுள்ளதால் அதன் விலை அதிகரிக்கும்.

இன்று மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் 2023-2024-ம் ஆண்டிற்கான நிதிநிலை அறிக்கையை தாக்கல் செய்து வருகிறார். முன்னதாக பட்ஜெட்டை தாக்கல் செய்வதற்கு முன்னதாக இன்று காலையில் குடியரசுத் தலைவர் திரௌபதி முர்முவை நிர்மலா சீதாராமன் சந்தித்தார். அதனைத் தொடர்ந்து டெல்லியில் பிரதமர் நரேந்திர மோடியின் தலைமையிலான மத்திய அமைச்சரவைக் கூட்டத்தில் பட்ஜெட்டுக்கு ஒப்புதல் அளிக்கப்பட்டது.

இந்த பட்ஜெட் காகிதமில்லா பட்ஜெட்டாகவே அமைந்துள்ளது. அடுத்த ஆண்டு மார்ச், ஏப்ரல் மாதங்களில் நாடாளுமன்ற தேர்தல் நடக்க உள்ளது. இந்த நிலையில், நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தாக்கல் செய்கிற கடைசி முழுமையான பட்ஜெட் இதுவாகும்.

SCROLL FOR NEXT