தங்கம் கடத்திவரப்பட்ட படகு
தங்கம் கடத்திவரப்பட்ட படகு தங்கக்கடத்தல் படகை கடலில் துரத்திய சுங்கத்துறை: சினிமா பாணியில் மண்டபத்தில் பரபரப்பு
தேசம்

தங்கக்கடத்தல் படகை கடலில் துரத்திய சுங்கத்துறை: சினிமா பாணியில் மண்டபத்தில் பரபரப்பு

காமதேனு

இலங்கையில் இருந்து மண்டபத்தில் தங்கக்கட்டிகளை கடத்தி வந்த போது சுங்கத்துறையினர் மடக்கியதால் கடத்தல்காரர்கள் தப்பி ஓடினர். கடத்தல் படகில் இருந்து சுமார் 5 கிலோ தங்க கட்டிகளை மீட்ட சுங்கத்துறையினர் கடத்தல்காரர்கள் குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

ராமநாதபுரம் மாவட்ட கடலோர பகுதிகளில் இருந்து இலங்கைக்கு கஞ்சா உள்ளிட்ட போதைப் பொருட்கள் அதிகளவில் கடத்தப்படுகின்றன. இதே போல் இலங்கையில் இருந்து தங்கம் கடத்துவதும் அதிகரித்து வருகிறது. கடற்படை, கடலோரக் காவல் படை, சுங்கத்துறை போன்ற மத்திய பாதுகாப்பு பிரிவுகளும், மாநில அளவில் கடலோர பாதுகாப்பு குழும பிரிவும் இயங்கி வரும் நிலையில் கடத்தல் நடவடிக்கைகள் கட்டுப்பட்டதாக தெரியவில்லை.

சாலை வழியாக கடத்தி செல்லப்படும் கஞ்சா உள்ளிட்ட போதைப்பொருட்களைத் தடுக்க மாவட்டத்தில் உள்ள கடற்கரையோர சாலைப் பகுதிகளில் கூடுதல் சோதனை சாவடிகள் அமைக்கப்பட்டிருந்தாலும் அவற்றில் அதிகபட்சமாக ஒரு காவலர் மட்டுமே பணியமர்த்தப்பட்டிருக்கிறார்.

இந்நிலையில் இந்த சோதனை தடுப்புகள் அப்பகுதியில் விபத்துகளை மட்டுமே தடுத்து வரும் நிலையில் கடத்தல்காரர்களின் சட்டவிரோத செயல்கள் அதிகரித்து வருகிறது.

அந்த வகையில் கடந்த சில நாட்களுக்கு முன் இலங்கையில் இருந்து கடத்தி வரப்பட்ட சுமார் 32 கிலோ தங்கத்தினை மத்திய வருவாய் புலனாய்வு பிரிவினர் கைப்பற்றினர். இதே போல் திருவாடானை - தொண்டி பகுதியில் இருந்து இலங்கைக்கு கஞ்சா கடத்த முயன்றவர்கள் காவல் துறையினரால் கைது செய்யப்பட்டனர்.

இந்நிலையில் இலங்கையில் இருந்து நேற்று கடத்தி வரப்பட்ட சுமார் 5 கிலோ தங்கத்தை சுங்கத்துறையினர் கைப்பற்றினர். கடத்தல் கேந்திரமாக திகழும் வேதாளை கடற்கரை நல்லதண்ணீர் பகுதியில் சுங்கத்துறையினர் நேற்று ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது அப்பகுதியில் தென்பட்ட படகை நிறுத்த சுங்கத்துறையினர் அறிவுறுத்தியும் அதில் வந்தவர்கள் படகினை நிறுத்தவில்லை.

இதனால் நிறுத்தாமல் சென்ற படகினை சுங்கத்துறையினர் விரட்டிச் சென்றனர். இதையடுத்து புதுமடம் கடற்கரையில் படகை நிறுத்திவிட்டு அதில் வந்தவர்கள் தப்பி ஓடினர். இதன் பின் அங்கு சென்ற சுங்கத்துறையினர் படகினை சோதனையிட்டனர். அப்போது அதில் சுமார் 5 கிலோ எடைகொண்ட தங்கக் கட்டிகள் சிக்கியது. இதையடுத்து படகையும், தங்கத்தையும் பறிமுதல் செய்த சுங்கத்துறையினர் தப்பி ஓடிய கடத்தல்காரர்களை தேடி வருகின்றனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

SCROLL FOR NEXT