தேசம்

கல்லறையை தோண்டி சிறுமியின் தலை துண்டிப்பு: இடுகாட்டில் தோண்டப்பட்ட பள்ளத்தால் உறவினர்கள் அதிர்ச்சி

காமதேனு

மதுராந்தகம் அருகே மின்கம்பம் விழுந்து உயிரிழந்த சிறுமியின் தலை மட்டும் துண்டிக்கப்பட்டு மாயமான சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

செங்கல்பட்டு மாவட்டம், மதுராந்தகம் அடுத்த  அவுரிமேடு கிராமத்தைச் சேர்ந்தவர் பாண்டியன். இவரின் மகள் கிருத்திகா(11) என்பவர் பள்ளிகளுக்குக் காலாண்டு விடுமுறை அளிக்கப்பட்டுள்ள நிலையில் கடந்த 5-ம் தேதி தனது வீட்டின் அருகே விளையாடிக் கொண்டிருந்தார். அப்போது வீட்டின் அருகே இருந்த மின்கம்பம் திடீரென ஒடிந்து கிருத்திகா மீது விழுந்தது. இதில் அந்த சிறுமி மின்கம்பத்துக்கு அடியில் சிக்கிக் கொண்டார். சிறுமியின் இடது தலை மற்றும் இடது கையில் பலத்த காயம் ஏற்பட்ட நிலையில் மதுராந்தகம் அரசு மருத்துவமனையில் முதல் உதவி அளிக்கப்பட்டு செங்கல்பட்டு மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்டார். இதைத் தொடர்ந்து சென்னை எழும்பூர் மருத்துவமனையில் மேல் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். சிகிச்சை பலனின்றி கிருத்திகா கடந்த வாரம் உயிரிழந்தார்.

இதையடுத்து அவரின் உறவினர்கள் மின்வாரியம் மீது நடவடிக்கை எடுக்க வேண்டி சாலைமறியலில் ஈடுபட்டனர். இந்நிலையில் அங்கு வந்த காவல்துறையினர் சிறுமியின் குடும்பத்தினருக்கு உரிய இழப்பீடு பெற்றுத் தருவதாகக் கூறினார்கள். இதையடுத்து அந்த போராட்டம் கைவிடப்பட்டது. இதையடுத்து அந்த சிறுமியின் உடல் உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டு, இடுகாட்டில் புதைக்கப்பட்டது. இந்நிலையில் அவரின் உடல் புதைக்கப்பட்ட இடத்தில் பள்ளம் தோண்டப்பட்டிருப்பதைக் கண்டு அப்பகுதியினர் அதிர்ச்சி அடைந்தனர். இதையடுத்து அங்கு வந்த காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இதில் சிறுமியின் தலைமட்டும் துண்டித்து எடுத்துச் செல்லப்பட்டுள்ளது முதல் கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.

SCROLL FOR NEXT