ஃபதேபூர் சிக்ரி கோட்டையில் தவறி விழுந்த பிரான்ஸ் பெண்... ஆம்புலன்ஸ் தாமதத்தால் துடிதுடித்து சாவு

By காமதேனு

ஃபதேபூர் சிக்ரி கோட்டையில் தவறி விழுந்து விபத்துக்குள்ளான பிரான்ஸ் சுற்றுலாப் பயணி, உரிய நேரத்தில் உதவாத ஆம்புலன்ஸால் பரிதாபமாக இறந்தார்.

உத்தரபிரதேசத்தின் ஆக்ரா மாவட்டத்தில் உலகப் புகழ்பெற்ற ஃபதேபூர் சிக்ரி கோட்டை உள்ளது. ஆக்ராவின் தாஜ்மஹாலுக்கு நிகராக இங்கேயும் சர்வதேச சுற்றுலாப் பயணிகள் வருகை தருகிறார்கள். ஆனால், தற்போது அந்த ஈர்ப்பிலும், இந்தியாவின் விருந்தோம்பல் மற்றும் பாதுகாப்பிலும் கரும்புள்ளி விழுந்துள்ளது.

ஃபதேபூர் சிக்ரி கோட்டையை சுற்றிப் பார்த்த பிரான்ஸ் சுற்றுலாப் பயணி ஒருவர், 9 அடி உயர மேடையிலிருந்து நேற்று முன்தினம் தவறி விழுந்தார். மரத்தினாலான கைப்பிடி திடீரென முறிந்து விழுந்ததில் இந்த விபத்து நேரிட்டிருக்கிறது.

இந்தியாவுக்கு வருகை தந்த 30 பேர் கொண்ட குழுவில் இருந்த 61 வயதான எஸ்மா பென் யெல்லெஸ் என்ற சுற்றுலா பெண் பயணி இவ்வாறு தவறி விழுந்தார். கீழே உள்ள கல் தரையில் மோதியதில், தலையில் பலத்த காயம் அடைந்து பின்னர் சிகிச்சை பலனின்றி அவர் உயிரிழந்தார்.

தவறி விழுந்த பெண்

கோட்டையில் அவசர உதவிக்கு ஆம்புலன்ஸ் எதுவும் இல்லாததில், தொலைவிலிருந்து அதனை வரவழைக்கப்பட்டது. அதிலும் சம்பவம் நடந்து ஒரு மணி நேரம் கழித்தே ஆம்புலன்ஸ் வந்ததுடன், அதில் ஆக்ஸிஜன் வசதி இல்லாததும் பிரான்ஸ் சுற்றுலாப் பயணிகளை அதிர்ச்சியடைய செய்தது.

அதன் பின்னர், சம்பவம் நடந்த மூன்று மணி நேரம் கழித்தே, 25 கிலோமீட்டர் தொலைவில் உள்ள ஆக்ரா மருத்துவமனையில் படுகாயமடைந்த சுற்றுலாப் பயணி அனுமதிக்கப்பட்டார். அவரை பரிசோதித்த மருத்துவர்கள் ஏற்கெனவே இறந்திருப்பதை உறுதி செய்தனர்.

இந்த உயிர்ப் பலியை அடுத்து, ஆக்ராவின் தாஜ்மஹாலில் கிடைக்கும் நிரந்தர ஆம்புலன்ஸ் வசதி போன்று, ஃபதேபூர் சிக்ரியில் வசதி செய்யப்படும் இந்திய தொல்லியல் துறையினர் உறுதியளித்துள்ளனர். மேலும், ஃபதேபூர் சிக்ரி கோட்டையில் படுகாயமடைந்த சுற்றுலாப் பயணியை மருத்துவமனைக்கு அழைத்துச் செல்வதில் தாமதம் ஏற்பட்டுள்ளதா என்பதைக் கண்டறிய மாஜிஸ்திரேட் விசாரணைக்கும் உத்தரவிடப்பட்டுள்ளது.

VIEW COMMENTS