தேசம்

‘கல்வியும் சுகாதாரமும் இலவசங்கள் அல்ல’ - கேஜ்ரிவால் திட்டவட்டம்!

காமதேனு

கல்வியையும் மருத்துவத்தையும் மக்களுக்கு வழங்குவதை இலவசம் எனக் கூறக் கூடாது என டெல்லி முதல்வர் அர்விந்த் கேஜ்ரிவால் தெரிவித்திருக்கிறார்.

தலைநகர் டெல்லியில் சத்ரஸால் மைதானத்தில் இன்று நடந்த சுதந்திரதினக் கொண்டாட்ட நிகழ்ச்சியில் கலந்துகொண்டு பேசிய அவர், “நாம் அனைவரும் ஒன்றிணைந்து பிரிட்டிஷாரை வெளியேற்றினோம். இன்று மீண்டும் ஒன்றிணைந்தால் உலகின் முன்னணி நாடாக இந்தியாவை நாம் உருவாக்க முடியும்” என்றார்.

தொடர்ந்து பேசிய அவர், “பல்வேறு துறைகளில் நாம் அடைந்திருக்கும் முன்னேற்றத்தைக் கொண்டாட வேண்டிய தருணம் இது. அதேசமயம், நம் முன்னே இருக்கும் சவால்களையும் நமது எதிர்காலத்தையும் பற்றி நாம் சிந்தித்தாக வேண்டும். நமக்குப் பின்னால் சுதந்திரம் பெற்ற நாடுகள் நன்கு முன்னேறியிருப்பது குறித்து பலரும் கேள்வி எழுப்புகிறார்கள். இந்தியா சுதந்திரமடைந்து 15 ஆண்டுகளுக்குப் பின்னர் சிங்கப்பூர் விடுதலையடைந்தது. இரண்டாம் உலகப்போரின்போது ஜப்பான் தாக்கி அழிக்கப்பட்டது. அந்நாடுகள் நம்மை முந்திவிட்டன. நாம் அவர்களுக்கு எந்தவிதத்திலும் குறைந்தவர்கள் அல்ல. இந்தியர்கள்தான் உலகிலேயே மிகவும் புத்திசாலிகள்; உழைப்பாளிகள். இருந்தும் நாம் பின்தங்கித்தான் இருக்கிறோம். ஒவ்வொரு இந்தியரும் சிறந்த சுகாதார சேவையையும் கல்வியையும் பெற்றால் மட்டுமே நமது மூவர்ணக் கொடி உயரத்தில் பறக்கும்” என்று கூறினார்.

இந்தியா வளமான தேசமாவதற்கு கல்வியும் சுகாதார வசதியும் மிக முக்கியமான அம்சங்களாக அமையும் என்றும் கேஜ்ரிவால் சுட்டிக்காட்டினார்.

SCROLL FOR NEXT