தேசம்

நகைச்சீட்டு நடத்தி கோடிக்கணக்கில் மோசடி: இருவர் கைது

காமதேனு

விருதுநகர் மாவட்டத்தில் நகைச்சீட்டு நடத்தி நகைக்கடை வாடிக்கையாளர்களிடம் கோடிக்கணக்கில் மோசடி செய்த இருவரை போலீஸார் கைதுசெய்தனர்.

விருதுநகர் மாவட்டம், சூலைக்கரைப் பகுதியைச் சேர்ந்தவர் கருப்பசாமி(36). இவர் விருதுநகர் கச்சேரி சாலையில் உள்ள நகைக்கடை ஒன்றில் நகைச்சீட்டில் சேர்ந்தார். மாதம் தோறும் பணம் கட்டி, கடைசியில் மொத்தமாக நகை எடுக்கும்படி இந்த சீட்டு அமைக்கப்பட்டுள்ளது. வாழவந்தான் என்னும் அவரது நண்பரின் மூலம் இந்தச் சீட்டு அவருக்கு அறிமுகமானது. கடந்த மார்ச் மாதத்தில் இருந்தே இங்கு நகைச்சீட்டு கட்டிவந்த கருப்பசாமி கடந்த மாதம் வழக்கம் போல் கட்டச் சென்றார்.

அப்போது கடையின் உரிமையாளர்களில் ஒருவரான சுப்பிரமணியன் என்பவர் தற்கொலை செய்து இறந்துவிட்டார். ஆனால், மற்றப் பங்குதாரர்கள் இதுகுறித்து கருப்பசாமியிடம் சொல்லாமல் கடையில் தணிக்கை நடப்பதாகவும் அடுத்த மாதம் சேர்த்தே கட்டிக்கொள்ளுமாறும் அவரிடம் தெரிவித்து அனுப்பினர். அவர் மீண்டும் இப்போது கட்டச் சென்றபோது கடை பூட்டியிருந்தது. இதேபோல் இந்தக் கடை உரிமையாளர்கள் மதுரையில் நடத்திவந்த பைனான்ஸ் கம்பெனியும் பூட்டியே கிடந்தது கருப்பசாமிக்குத் தெரியவந்தது.

நகைச்சீட்டில் இதுவரை மூன்றேகால் லட்சம் கட்டியிருந்த கருப்பசாமி இதுகுறித்து விருதுநகர் மாவட்ட சைபர் கிரைம் போலீஸில் புகார் கொடுத்தார். போலீஸார் நடத்திய விசாரணையில் நூற்றுக்கும் அதிகமான வாடிக்கையாளர்களிடம், ஒருகோடி ரூபாய்க்கு மேல் மோசடி செய்தது தெரியவந்தது. இதனைத் தொடர்ந்து சைபர் கிரைம் போலீஸார் கடையின் உரிமையாளர் பவுன்ராஜ், தற்கொலை செய்துகொண்ட சுப்பிரமணியனின் மனைவி முத்துமாரி, தப்பியோடிய மற்றொரு பங்குதாரரான வரதராஜனைத் தேடிவருகின்றனர்.

SCROLL FOR NEXT