தேசம்

மது குடிக்கும் போது தகராறு… வாலிபரைக் கொன்று குப்பைத்தொட்டியில் வீசிய பயங்கரம்: இளம்பெண் உள்பட 4 பேர் கைது

காமதேனு

மது அருந்தும் போது ஏற்பட்ட தகராறில் வாலிபரை உருட்டுக்கட்டையால் தாக்கிக் கொன்று குப்பைத் தொட்டியில் வீசியதாக இளம் பெண் உள்பட 4 பேரை போலீஸார் கைது செய்தனர்.

சென்னை ராயப்பேட்டை காசிம் தெருவைச் சேர்ந்தவர் தாவீது ராஜா(20). இவர் 13-ம் தேதி முதல் காணாமல் போனார். அவரது தாய் தேவி தனது மகனை ஆட்டோவில் தேடிச் சென்றுள்ளார். அப்போது ராயப்பேட்டை ஒய்எம்சிஏ மைதானம் அருகே உள்ள குப்பைத்தொட்டி அருகே தாவீதுராஜா காயங்களுடன் கிடந்தார். உடனடியாக அவரை மருத்துவமனைக்கு தேவி கொண்டு சென்றார். ஆனால், அவரை பரிசோதனை செய்த போது தாவீது ராஜா ஏற்கனவே இறந்து போனது தெரிய வந்தது.
இதுகுறித்து அண்ணாசாலை போலீஸார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வந்தனர். இந்த நிலையில், அந்த பகுதியில் உள்ள சிசிடிவி காட்சிகளை போலீஸார் ஆய்வு செய்தனர். அப்போது 13-ம் தேதி இரவு டூவீலரில் ஒரு ஆண், ஒரு பெண் தாவீது ராஜாவை கொண்டு வந்து ஒய்எம்சிஏ மைதானம் அருகே உள்ள குப்பைத் தொட்டி அருகே போட்டு விட்டுப் போனத தெரிய வந்தது.

இதையடுத்து போலீஸார் தீவிர விசாரணை நடத்தினர். அப்போது ஆயிரம்விளக்கு கிரீம்ஸ் சாலை பகுதியைச் சேர்ந்த ரோஸி (எ) சங்கீதா(27), ராயப்பேட்டை அண்ணா தெரு பகுதியைச் சேர்ந்த ராக்கி (எ) ராஜேஷ்(23) ஆகியோர் தான் தாவீது ராஜாவை குப்பைத் தொட்டி அருகே போட்டுச் சென்றவர்கள் எனத் தெரியவந்தது.

அவர்களிடம் போலீஸார் நடத்திய விசாரணையில், கடந்த 13-ம் தேதி இரவு பூங்காவில் ரோஸியுடன் தாவீது ராஜா மது அருந்தியுள்ளார். அப்போது அவர்களுக்குள் தகராறு ஏற்பட்டுள்ளது. அப்போது ரோஸியுடன் இருந்த அவரது நணபர்களான ராக்கி (எ) ராஜேஷ், ஜீவா(22), பார்த்திபன்(35) ஆகியோர் சேர்ந்து உருட்டுக்கட்டைகளால் கடுமையாகத் தாக்கியுள்ளனர். இதில் தாவீத்ராஜா மயங்கி விழுந்து இறந்துள்ளார். அவரை அங்கிருந்து டூவீலரில் கொண்டு சென்று குப்பைத்தொட்டியில் வீசியது தெரிய வந்தது. இதையடுத்து ரோஸி உள்பட நான்கு பேரையும் அண்ணாசாலை போலீஸார் கைது செய்தனர். ரோஸி மீது கஞ்சா வழக்கும், ராக்கி(எ) ராஜேஷ் மீது கொலை முயற்சி, கஞ்சா, வழிப்பறி வழக்குகள் நிலுவையில் உள்ளது குறிப்பிடத்தக்கது.

SCROLL FOR NEXT