பூந்தமல்லி சாலையோர பள்ளத்தில் கிடக்கும் இருசக்கர வாகனங்கள்  கழிவு நீருக்கு தோண்டப்பட்ட பள்ளத்தில் கவிழ்ந்த இரு சக்கர வாகனங்கள்
தேசம்

கழிவுநீருக்கு தோண்டப்பட்ட பள்ளத்தில் கவிழ்ந்த இரு சக்கர வாகனங்கள்: 5 பேர் படுகாயம்

காமதேனு

சென்னை - பெங்களூர் தேசிய நெடுஞ்சாலையில் கழிவுநீர் கால்வாய்க்காக  தோண்டப்பட்ட பள்ளத்தில் விழுந்த ஐந்து பேருக்கு பலத்த காயம் ஏற்பட்டதுடன் எலும்பு முறிவும் ஏற்பட்டுள்ளது.

சென்னை-பெங்களூரு தேசிய நெடுஞ்சாலையில் கழிவுநீர் கால்வாய் அமைக்கும் பணி நடைபெற்று வருகிறது. இதற்காக சாலை ஓரங்களில் ஆழமாக பள்ளங்கள் தோண்டப்பட்டுள்ளன.  பூந்தமல்லி பகுதியிலும் இதற்காக பள்ளங்கள் தோண்டப்பட்டுள்ளது. சில இடங்களில் தடுப்புகள் வைக்கப்பட்டிருந்தாலும், பெரும்பாலான இடங்களில் போதிய தடுப்புகள் அமைக்கப்படவில்லை.

இந்த நிலையில் நேற்று இரவு பணி முடிந்து  இரண்டு இருசக்கர வாகனங்களில்  வீடு திரும்பிக் கொண்டிருந்த இளைஞர்கள் ஐந்துபேர்  அங்கு  தோண்டப்பட்டிருந்த ராட்சத பள்ளத்தில் எதிர்பாராத விதமாக தவறி விழுந்தனர். இதில் 5 இளைஞர்களின் கை, கால்களில் பலத்த அடிபட்டது. உயிருக்கு ஆபத்தான நிலையில் மீட்கப்பட்ட அவர்கள் பூந்தமல்லி மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டனர்.

அங்கு அவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வரும் நிலையில், அவர்களுக்கு எலும்பு முறிவு ஏற்பட்டு இருப்பதாக மருத்துவமனை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

ராட்சத பள்ளத்தின் அருகில் தடுப்புகள் அமைத்து போதிய பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்படாததாலும், மின்விளக்குகள் இல்லாததாலும், பைக்கில் வந்தவர்கள் தவறி விழுந்துள்ளனர் என்று கூறும் அப்பகுதி பொதுமக்கள் போதுமான அளவிற்கு தடுப்புகள் அமைத்து இப்பணிகளை மேற்கொள்ள வேண்டும்,  அந்த  இடங்களில் போதுமான வெளிச்சத்திற்கு ஏற்பாடு செய்ய வேண்டும் என்று கேட்டுக் கொண்டுள்ளனர்.

SCROLL FOR NEXT