தேசம்

இந்த வாகனங்களுக்கு வழி விடாவிட்டால் 10 ஆயிரம் அபராதம்: தமிழக அரசு அதிரடி உத்தரவு

காமதேனு

ஆம்புலன்ஸ் மற்றும் தீயணைப்பு உள்ளிட்ட அவசரக்கால வாகனங்களுக்கு வழிவிட மறுத்தால் பத்தாயிரம் ரூபாய் வரை அபராதம் விதிக்கப்படும் எனத் தமிழக அரசு தெரிவித்துள்ளது.

சாலை விதிகளை மீறி பயணம் செய்வோரின் எண்ணிக்கை தமிழகத்தில் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இதனால் பலரும் தொடர்ந்து விபத்துகளில் சிக்கி வருகின்றனர்.  இந்நிலையில் தமிழக அரசின் சாலை போக்குவரத்து விதிகளில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது . சாலை போக்குவரத்து குற்றங்களுக்கான, விதிமீறல்களுக்கான அபராத தொகைகள் தற்போது மாற்றப்பட்டு அதற்கான விவரங்கள் தற்போது வெளியிடப்பட்டுள்ளன.

இது குறித்து தமிழக அரசு வெளியிட்டுள்ள அரசாணையில், தடைசெய்யப்பட்ட இடங்களில் தேவையில்லாமல் ஒலி எழுப்பினால் 1000 ரூபாய் அபராதமும், காப்பீடு இல்லாமல் வாகனத்தை ஓட்டினால் 2000 ரூபாய் அபராதமும், மன ரீதியாகத் தகுதி இல்லாமல் வாகனம் ஓட்டினால் 2000 ரூபாய் அபராதமும் விதிக்கப்படும். வாகனங்களைப் பதிவு செய்யாமல் இயக்கினால் 5000 அபராதம் (பழைய அபராதம் 2500) விதிக்கப்படும். விபத்துகளை ஏற்படுத்தும் வண்ணம் அபாயகரமாக வாகனத்தை ஓட்டுவது, பந்தயங்களில் ஈடுபடுவது, ஒலி மாசு ஏற்படும் வகையில் வாகனங்களை இயக்குவது உள்ளிட்டவற்றிற்கு 10,000 ரூபாய் அபராதமும் விதிக்கப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. கனரக வாகனம் வடிவமைப்புக்கு அப்பால் நீண்டு சென்றால் ரூபாய் 20 ஆயிரம் அபராதம் விதிக்கப்படும் என்று எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

SCROLL FOR NEXT