உழவர் உதவி மையத்தில் இருந்து விதையைப் பெற்றுச் செல்லும் விவசாயி
உழவர் உதவி மையத்தில் இருந்து விதையைப் பெற்றுச் செல்லும் விவசாயி  
தேசம்

உற்சாகமூட்டும் உழவர் உதவி மையம்: விவசாயிகளின் வீடு தேடிச் செல்கிறது

காமதேனு

சிவகங்கை மாவட்டம் வேப்பங்குளத்தில் துவங்கப்பட்டுள்ள உழவர் உதவி மையத்தால் அப்பகுதி விவசாயிகள் பெரிதும் பயனடைந்து வருகின்றனர்.

சிவகங்கை மாவட்டம் கல்லல் அருகே உள்ள வேப்பங்குளத்தில் நுகர்வோர்களுக்கும், விவசாயிகளுக்கும் இடையே உள்ள இடைவெளியைக் குறைத்து, விவசாயிகளின் இன்னல்களைக் கலைந்து விவசாயத்தின் மீதான ஆர்வத்தை தூண்ட வேளாண் துறை சார்பில் கட.ந்த ஆண்டு டிசம்பர் மாதம் உழவர் உதவி மையம் துவங்கப்பட்டது.

இதன் மூலம் கல்லல் மற்றும் சுற்றுவட்டார கிராமங்களில் உள்ள விவசாயிகளால் விளைவிக்கப்படும் பழ வகைகளும், கிழங்கு வகைகளும் பல்வேறு பகுதிகளுக்கு விநியோகம் செய்யப்படுகிறது. இதனால், இடைத்தரகர்கள் இன்றி விவசாயிகள் நேரடியாக லாபம் அடைந்து வருகின்றனர். மேலும், விதை நெல்லை மொத்தமாக கொள்முதல் செய்து தேவைப்படும் நபர்களில் வீட்டுக்கே நேரடியாக சென்று சேர்க்கிறது உழவர் உதவி மையம்.

இதுகுறித்து மையத்தின் ஒருங்கிணைப்பாளர் திருச்செல்வம் கூறுகையில், "விவசாயிகளிடம் நேரடியாக வீட்டுக்கு வீடு சென்று அவர்களுக்கு தேவையான விதை நெல் மற்றும் உரம் ஆகியவற்றின் விவரத்தை முதலில் கேட்டுத் தெரிந்து கொள்வோம்.

தொடர்ந்து, ஒட்டுமொத்தமாக அவர்களுக்குத் தேவைப்படும் விதை நெல்லின் வகையை தேவைக்கேற்ப வாங்கி, அதனை விவசாயிகளுக்கு பிரித்துக்கொடுத்து வருகிறோம். சிறு, குறு விவசாயிகள் தனித்தனியே சென்று வாங்கி வருவதில் பெரும் இடர்பாடுகள் உள்ளன. அவற்றைத் தவிர்க்கும் வகையில் இதனை செய்து வருகிறோம்" என்றார்.

மேலும், "விவசாயிகள் விவசாயத் தொழிலில் மட்டும் கவனம் செலுத்தினால் போதும், அவர்களுக்கு தேவையான அனைத்து உதவிகளையும் வேப்பங்குளத்திலேயே இந்த உழவர் உதவி மையத்தின் மூலமாக அளிப்பது தான் எங்களது இலக்கு" என்றார்.

உழவர் உதவி மையத்தின் செயல்பாட்டால் மீண்டும் இப்பகுதியில் பல ஏக்கர் விவசாய நிலத்தில் மீண்டும் விவசாயம் செய்யும் சூழல் உருவாகியுள்ளதாக இப்பகுதி விவசாயிகள் மகிழ்ச்சி தெரிவிக்கின்றன.

இதுகுறித்து அப்பகுதி விவசாயிகள் கூறுகையில், "இந்த மையம் திறப்பதற்கு முன்பாக கல்லலுக்குச் சென்று விதை நெல், உரம் உள்ளிட்டவற்றை வாங்கி வந்தோம். மேலும், எங்களுக்கு தரமான விதை கிடைப்பது இல்லை. போக்குவரத்து செலவும் அதிகமாக இருந்தது. தற்போது, இந்த உழவர் உதவி மையம் திறக்கப்பட்டுள்ளதால் போக்குவரத்து செலவு மிச்சமாகி உள்ளது, நேரம் வீணாவது கிடையாது. அதுமட்டுமின்றி, தரமான விதைகள் எங்களுக்குக் கிடைக்கிறது" என்கின்றனர் மகிழ்ச்சியுடன்.

SCROLL FOR NEXT