தேசம்

தவறான மருத்துவ குறிப்பு சொன்ன சித்த மருத்துவர் ஷர்மிகா: அதிரடி காட்டியது இந்திய மருத்துவ இயக்குநரகம்!

காமதேனு

சமூகவலைதளப் பக்கங்களான பேஸ்புக், யூடியூப் உள்ளிட்டத் தளங்களில் தவறான மருத்துவத் தகவல்களை சொன்னதாக சித்த மருத்துவர் ஷர்மிகா மீது சர்ச்சை எழுந்தது. இந்நிலையில் இதுகுறித்து உரிய விளக்கம் தர இந்திய மருத்துவ இயக்குநரகம் அவருக்கு நோட்டீஸ் அனுப்பியுள்ளது.

பாஜகவில் மூத்த நிர்வாகியாக இருப்பவர் டெய்சி சரண். இவரது மகள் தான் ஷர்மிகா. சித்த மருத்துவரான இவர் சமூகவலைதளங்களில் மக்களிடம் பதற்றம் உருவாக்கும்வகையில் சர்ச்சையான கருத்துக்களை பேசிவந்தார். அதில் குறிப்பாக குலோப்ஜாமூன் சாப்பிட்டால் மூன்றுகிலோ எடை கூடும். பெண்கள் குப்புறக் கவிழ்ந்து படுத்தால் மார்பகப் புற்றுநோய் வரும். கண்ட, கண்ட கடைகளில் சுத்தம் இல்லாத உணவைச் சாப்பிட்டால் டெங்கு, மலேரியா நோய்கள் வரும்” என்பவையெல்லாம் பிரசித்திப்பெற்றவை. டெங்குவைப் பொறுத்தவரை ஏடிஸ் கொசுக்களால் வருபவை. இப்படி இவர் மருத்துவ ஆதாரம் இல்லாத தவறான தகவல்களைச் சொல்வதாக தொடர்ந்து சர்ச்சை எழுந்தது.

இந்நிலையில் சித்த மருத்துவர் ஷர்மிகா, பேசும்வேகத்தில் கவனிக்காமல் அப்படிப் பேசியதாகவும் ஒரு விளக்க வீடியோ வெளியிட்டு இருந்தார். இந்நிலையில், இந்திய மருத்துவ இயக்குநரகம் ஷர்மிகா வெளியிட்டக் கருத்துகளுக்கு விளக்கம் கேட்டு நோட்டீஸ் அனுப்பி உள்ளது. இந்திய மருத்துவ ஆணையர் மற்றும் தாளாளர் ஆகியோரை உள்ளடக்கிய குழுவின் முன்பு 15 நாள்களுக்குள் ஆஜராகி விளக்கம் அளிக்கவேண்டும் என அதில் கூறப்பட்டுள்ளது.

SCROLL FOR NEXT