கைதானவர்கள்
கைதானவர்கள்  3 கிலோ கடத்தல் தங்கத்துடன் எஸ்கேப்; ஊழியர் மீது கொலை வெறித்தாக்குதல்: முதலாளியை சிக்கவைத்த மனைவி
தேசம்

3 கிலோ கடத்தல் தங்கத்துடன் எஸ்கேப்; ஊழியர் மீது கொலை வெறித்தாக்குதல்: முதலாளியை சிக்கவைத்த மனைவி

காமதேனு

3 கிலோ கடத்தல் தங்கத்துடன் எஸ்கேப்பான ஊழியரை கடத்திச் சென்று அறையில் அடைத்து சித்ரவதை செய்த உரிமையாளர்கள் 4 பேர் கைது செய்யப்பட்டனர். பாதிக்கப்பட்டவரின் மனைவி கொடுத்தப் புகாரின் பேரில் காவல்துறையினர் நடவடிக்கை எடுத்துள்ளனர்.

சென்னை தண்டையார்பேட்டை பகுதியை சேர்ந்தவர் ரசூல் என்கிற கனி(56). இவர் மண்ணடியில் அப்துல் சலாம் என்பவர் நடத்தி வரும் ஏற்றுமதி இறக்குமதி நிறுவனத்தில் (கடத்தல் தங்கம் வெளிநாட்டு பொருட்கள் வியாபாரம்) கடந்த மூன்று ஆண்டுகளாக குருவியாக பணியாற்றி வருகிறார். இந்த நிறுவனத்தில், அப்துல் சலாம் உடப்ட 3 பேர் பங்குதாரர்களாக உள்ளனர். இந்தநிலையில் கடந்த பிப்ரவரி 26-ம் தேதி ரசூல் கார் ஓட்டுநர் தினேஷ் என்பவருடன் சேர்ந்து திருச்சியில் இருந்து சென்னைக்கு 2 கோடி ரூபாய் மதிப்புள்ள 3 கிலோ தங்கக்கட்டிகளை காரில் கொண்டு வந்துள்ளார்.

மதுராந்தகம் அருகே வரும்போது ஒரு கும்பல் ரசூலை வழிமறித்து தங்கத்தை பறித்து சென்றது. உடனே ரசூல் உரிமையாளர்களில் ஒருவரான அப்துல் குத்தூஸ் என்பவருக்கு தகவல் தெரிவித்ததை அடுத்த அவர் தனது நண்பர் சாதிக் உடன் மதுராந்தகம் சென்றுள்ளார். மேலும் இது கடத்தல் தங்கம் என்பதால் காவல்துறையிடம் இது குறித்து புகார் அளிக்காமல் இவர்களே விசாரணை நடத்தியுள்ளனர். பின்னர் ரசூலை மாமல்லபுரம் அழைத்துச் சென்று ஒரு விடுதியில் அடைத்து வைத்து கடுமையாக தாக்கினர். அப்போது ரசூல் பணத்திற்கு ஆசைபட்டு, ராமநாதபுரம் மாவட்டத்தைச் சேர்ந்த சமீர் உள்ளிட்ட சிலருடன் சேர்ந்து திட்டம் போட்டு தங்கத்தை திருடியதாக ஒப்புக்கொண்டதாக கூறப்படுகிறது. இருவரும் சேர்ந்து ரசூலை கடுமையாக தாக்கியதால் அடி தாங்காமல் ரசூல் மயங்கி விழுந்துள்ளார். பின்னர் அவர்கள் ரசூலை கீழ்ப்பாக்கத்தில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனையில் சேர்த்துவிட்டு தப்பி சென்றனர்.

பின்னர் அப்துல் தங்களிடம் பணியாற்றி வரும் ரசூல் மற்றும் அவரது கூட்டாளிகள் திட்டம் போட்டு ஒரு கிலோ தங்கத்தை திருடிவிட்டதாக கடந்த 1-ம் தேதி மதுராந்தகம் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். அதன் பேரில் ராமநாதபுரம் மாவட்டத்தைச் சேர்ந்த சமீர், பொன்மணி சங்கர் ஆகியோரை மதுராந்தகம் போலீஸார் கைது செய்து ஒரு கிலோ தங்கம் மற்றும் 25 ஆயிரம் பணத்தை பறிமுதல் செய்து சிறையில் அடைத்தனர். இந்தநிலையில் கீழ்ப்பாக்கம் தனியார் மருத்துவமனையில் கோமா நிலையில் சிகிச்சை பெற்று வந்த ரசூலை, ஒரு ஆள் போட்டு அப்துல் குத்தூஸ் மற்றும் அவரது பங்குதாரர்கள் கண்காணித்து வந்ததுடன் அவரது மருத்துவச் செலவுக்கு 6 லட்சம் ரூபாயை செலுத்தியுள்ளனர். பின்னர் ஐசியூ வார்டிலிருந்து சில தினங்களுக்கு முன்பு ரசூல் சாதாரண வார்டுக்கு மாற்றப்பட்டார்.

இதற்கிடையே வேலைக்கு சென்ற தனது கணவர் 20 நாட்களுக்கு மேலாகியும் வீடு திரும்பாததால் சந்தேகம் அடைந்த ரசூலின் மனைவி ஜவகர் நிஷா, இது தொடர்பாக அப்துல் சலாம், அப்துல் குத்தூஸ், அப்துல் ரகுமான், அப்துல் வதூத் ஆகியோரிடம் செல்போனில் பேசியுள்ளார். அப்போது, தங்க வியாபாரம் தொடர்பாக ரசூல் தங்களுடன் இருப்பதாகவும் அவரை பற்றி கவலைப்பட வேண்டாம் எனக் கூறியுள்ளனர். உடனே நிஷா தனது கணவர் பேச சொல்லுங்கள் என கேட்டபோது, வியாபாரத்துக்காக வைத்திருந்த நகைகள் திருட்டு போனது தொடர்பாக சிலரிடம் பேசிக் கொண்டிருப்பதாக கூறி சமாளித்துள்ளனர். இதனால் சந்தேகம் அடைந்த நிஷா தொடர்ந்து உரிமையாளர்களிடம் தனது கணவர் குறித்து கேட்டு் தொல்லை கொடுத்ததால் ஒரு கட்டத்தில் அவரது தொல்லை தாங்காமல் ரசூலை கீழ்ப்பாக்கம் தனியார் மருத்துவமனையில் அனுமதித்திருப்பதாக கூறிவிட்டு இணைப்பை துண்டித்துள்ளனர்.

கைதானவர்கள்

தொடர்ந்து ஜவகர் நிஷா, முதலாளி அப்துல் சலாமை தொடர்பு கொண்டு, எப்படியாவது எனது கணவரை காப்பாற்றுமாறு கெஞ்சியுள்ளார். அதற்கு அப்துல் சலாம் உள்ளிட்ட நான்கு பேரும் ஏற்கெனவே 6 லட்ச ரூபாய் வரை மருத்துவ செலவு செய்து விட்டோம், நீ தான் எங்களுக்கு பணம் தர வேண்டும் எனக்கூறியதுடன், இனி போன் செய்து எங்களை தொந்தரவு செய்யக்கூடாது என மிரட்டியுள்ளனர். இதனால் பாதிக்கப்பட்ட நிஷா சென்னை மாநகர காவல் ஆணையரிடம் புகார் அளித்தன் பேரில் வடக்கு கடற்கரை போலீஸார் விசாரணை நடத்தி, கடத்தல் தங்கம் வியாபாரம் செய்து வந்த ஏழுகிணறு பகுதியை சேர்ந்த அப்துல் குத்தூஸ் (40), அப்துல் வதூத் (40) கொய்யா தோப்பை சேர்ந்த அப்துல் சலாம்(40),

மண்ணடியை சேர்ந்த அப்துல் ரகுமான்( 36) ஆகிய நான்கு பேரை பிடித்து விசாரணை செய்தனர்.

விசாரணையில், கடந்த 2 ஆண்டுகளாக தங்களிடம் நம்பிக்கையான முறையில் பணியாற்றி வந்தார் ரசூல். அவர் திடீரென தங்கக்கட்டிகளுக்கு ஆசைப்பட்டு தங்களை நம்பிக்கை துரோகம் செய்ததை தாங்கிக் கொள்ள முடியவில்லை. தங்கம் குறித்து போலீஸிடம் தெரிவிக்காமல் இருக்க அவரை கடத்திச்சென்று தாக்கி விசாரித்தோம். அப்போது அவர் மயக்க நிலைக்கு சென்றதால் பயத்தில் மதுராந்தகம் காவல் நிலையத்தில் பொய் புகார் அளித்துவிட்டு அவரை தங்களது கட்டுப்பாட்டிலேயே வைத்து மருத்துவமனையில் சிகிச்சை அளித்ததாக தெரிவித்துள்ளனர். இதனையடுத்து 4 பேர் மீதும் ஆள் கடத்தல், கொலை முயற்சி உள்ளிட்ட பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர், கடத்தலுக்கு பயன்படுத்திய ஒரு காரை பறிமுதல் செய்தனர். மேலும் தலைமறைவாக உள்ள சாதிக் உள்ளிட்ட சிலரை தேடி போலீஸார் தேடிவருகின்றனர்.

SCROLL FOR NEXT