தேசம்

போதைப்பொருள் பயன்படுத்தும் பழக்கம் இளம் சிறார்களிடம் அதிகமாகி விட்டது: அமைச்சர் கீதாஜீவன் கவலை

காமதேனு

மாணவிகளின் தற்கொலை சம்பவங்களைத் தடுக்கும் நோக்கில் தனியார் பள்ளி விடுதிகளை ஆய்வு செய்யும் பணிகள் ஓரிரு நாட்களில் தொடங்கப்படும் என மதுரையில் அமைச்சர் கீதா ஜீவன் தெரிவித்துள்ளார்.

உலகத் தாய்ப்பால் வார விழாவை முன்னிட்டு மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனையில் இன்று நடைபெற்ற கண்காட்சியை சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத் துறை அமைச்சர் கீதா ஜீவன் திறந்து வைத்தார். மேலும், கர்ப்பிணிகள் மற்றும் பச்சிளம் குழந்தைகளுக்கு ஊட்டச் சத்து பெட்டகங்களையும் அவர் வழங்கினார்.

இதன் பின் அவர் செய்தியாளர்களிடம் கூறுகையில், "பெண்கள் மற்றும் குழந்தைகள் நலனைப் பாதுகாக்க முதல்வர் உத்தரவு பிறப்பித்து உள்ளார். போக்சோ வழக்குகளை விரைந்து முடிக்க நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது. தாய்ப்பால் வார விழாவை முன்னிட்டு வீடு, வீடாகச் சென்று விழிப்புணர்வு செய்யப்படுகிறது.

பள்ளி இடை நிற்றல் காரணமாக, இளம் சிறார் குற்றவாளிகள் உருவாகிறார்கள். போதைப் பொருள் பயன்படுத்துவது இளம் சிறார்களிடம் அதிகமாகி வருகிறது. இளம் சிறார்கள் குற்றவாளிகளாக உருவாவதைத் தடுக்க நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது" என்றார்.

மேலும், "தமிழகத்தில் உள்ள தனியார் பள்ளி விடுதிகளை ஆய்வு செய்ய முதல்வர் உத்தரவு பிறப்பித்தார். அதன் அடிப்படையில் ஓரிரு நாட்களில் தமிழகத்தில் உள்ள அனைத்து தனியார் பள்ளிகளின் விடுதிகளிலும் ஆய்வு செய்யும் பணிகள் தொடங்கப்படும். சமூக நலத்துறை, பள்ளி கல்வித்துறை இணைத்து இந்த ஆய்வுகளை மேற்கொள்ள உள்ளது. மேலும், குழந்தைகள் மீது பெற்றோர்கள் அழுத்தத்தை திணிக்கக் கூடாது. குழந்தைகள் விரும்பியதைப் படிக்க, பெற்றோர்கள் ஒத்துழைக்க வேண்டும்" என்றார்.

SCROLL FOR NEXT