தேசம்

நள்ளிரவில் நடந்த இரட்டைக் கொலை: திமுக பெண் நிர்வாகி கொலைக்கு பழிக்குப் பழியா?

காமதேனு

விருதுநகர் மாவட்டம், அருப்புக்கோட்டையில் நேற்று நள்ளிரவு நடந்த இரட்டைக் கொலை திமுக பெண் நிர்வாகி கொலைக்கு பழிக்கு பழியாக நடைபெற்ற சம்பவமா என்பது குறித்து போலீஸார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

விருதுநகர் மாவட்டம், உடையனம்பட்டியை சேர்ந்தவர் ராக்கம்மாள். திமுகவில் அப்பகுதி மகளிரணி நிர்வாகியாக இருந்தார். இவர் தன் அக்கா மகள் சோலை மணி என்பவரை தத்தெடுத்து வளர்த்துவந்தார். சோலைமணிக்கு, அதேபகுதியைச் சேர்ந்த மூர்த்தி என்பவரைத் திருமணம் செய்துவைத்தார். ஆனால் கருத்துவேறுபாடு ஏற்பட்டு சோலைமணி கணவரைப் பிரிந்து தன் சித்தி ராக்கம்மாள் வீட்டிற்கே வந்துவிட்டார். மூர்த்தி சமரசம் பேசியும் அவர் கணவருடன் செல்லவில்லை. இதனால் தன் மனைவி தன்னை பிரிந்ததற்கு ராக்கம்மாள் தான் காரணம் என முடிவு செய்த மூர்த்தி அவரிடம் தொடர்ந்து சண்டை செய்துவந்தார்.

இந்த முன்விரோதத்தில் சில மாதங்களுக்கு முன்பு ராக்கம்மாள் படுகொலை செய்யப்பட்டார். இதில் மூர்த்தி, அவரது சகோதரர் சபரி, உறவினர் ரத்தினவேல் பாண்டியன் ஆகிய மூவரும் சிறையில் அடைக்கப்பட்டனர். இந்த மூவரும் அண்மையில் ஜாமீனில் வந்தனர். இந்நிலையில் நேற்று மதியம் வீட்டில் இருந்து வெளியே சென்ற சபரி, ரத்தினவேல் பாண்டியன் இருவரும் வீடு திரும்பவில்லை. இந்நிலையில் நள்ளிரவு தொட்டியாங்குளம் பகுதியில் இருவரும் சடலமாக மீட்கப்பட்டனர். திமுக நிர்வாகி கொலைக்கு பழிக்குப் பழியாக இந்தக் கொலை நடந்ததா என்பது குறித்து அருப்புக்கோட்டை போலீஸார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

SCROLL FOR NEXT