சென்னை உயர்நீதிமன்றம்
சென்னை உயர்நீதிமன்றம் கடந்த ஆட்சியில் ஒரே நாளில் 54 பேர் நியமனம் ரத்து கோரி வழக்கு தள்ளுபடி: உயர்நீதிமன்றம்
தேசம்

வெளிப்படைத்தன்மையை பின்பற்றவும்: ஒரே நாளில் 54 இளநிலை உதவியாளர் நியமனத்தை ரத்து செய்யக் கோரிய மனு தள்ளுபடி

காமதேனு

கடந்த ஆட்சியில் கோவை மாநகராட்சியில் இளநிலை உதவியாளர் 54 பேர் ஒரே நாளில் பணி நியமனம் தொடர்பான வழக்கை சென்னை உயர் நீதிமன்றம் தள்ளுபடி செய்து உத்தரவிட்டது.

கோவை மாநராட்சியில் 69 இளநிலை உதவியாளர் பணியிடங்களுக்கு விண்ணப்பம் கோரியதில் 654 பேர் விண்ணப்பித்தனர். இதில், நேர்முகத்தேர்வு, சான்றிதழ் சரிபார்ப்பிற்கு அழைக்கப்பட்ட 440 பேரில் தேர்வான 54 பேர் பணி நியமனம் பெற்றனர்.

இந்த நியமனத்தை ரத்து செய்ய வேண்டும். தனக்கு முன்னுரிமை வழங்க வேண்டும் என கருணை அடிப்படையில் 2016-ல் தூய்மைப் பணியாளராக நியமிக்கப்பட்ட ஈஸ்வரி சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார்.

அந்த மனுவில், முறையாக விளம்பரம் செய்யாததால், உரிய தகுதி இருந்தும் தன்னால் இளநிலை உதவியாளர் பணி தேர்வில் பங்கேற்க முடியவில்லை எனவும், உரிய விதிகள், இடஒதுக்கீடு பின்பற்றாமல் அப்போதைய உள்ளாட்சித்துறை அமைச்சரின் செல்வாக்கால், 54 பேரும் ஒரே நாளில் நியமிக்கப்பட்டதாக தெரிவித்திருந்தார்.

இந்த வழக்கு நீதிபதி அப்துல் குத்தூஸ் முன் விசாரணைக்கு வந்தது. இப்பணியிடங்களுக்கு விண்ணப்பம் கோரி மாலை நாளிதழ்களில் விளம்பரம் வெளியிடப்பட்டதாகவும், அதற்கு 3 லட்சம் செலவானதாகவும் கோவை மாநகராட்சி சார்பில் தெரிவிக்கப்பட்டது.

யாருக்கும் சலுகை காட்டப்படவில்லை எனவும், உரிய தேர்வு நடைமுறைகள், இடஒதுக்கீடு பின்பற்றி பணி நியமனம் வழங்கப்பட்டதாக விளக்கம் அளிக்கப்பட்டது. சட்டமன்ற தேர்தல்  அறிவிக்கப்பட்டு, தேர்தல் நடத்தை விதிகள் அமலுக்கு வந்து விடும் என்ற காரணத்தால் 5 குழுக்கள் அமைத்து, நேர்முகத்தேர்வு மூலம், ஒரே நாளில் இவர்கள் நியமிக்கப்பட்டதாகவும், கருணை அடிப்படையில் தூய்மைப் பணியாளராக பணியாற்றும் மனுதாரருக்கு இந்த நியமனம் தொடர்பாக கேள்வி எழுப்ப அடிப்படை தகுதியில்லை எனவும் தெரிவிக்கப்பட்டது.

வழக்கு தொடர்பாக தாக்கலான ஆவணங்களை ஆய்வு செய்த நீதிபதி,  இளநிலை உதவியாளர் தேர்வு தொடர்பாக விளம்பரம் வெளியிடப்பட்டுள்ளதாகவும், இத்தேர்வில் பங்கேற்காத நிலையில், இப்பணி நியமனத்தை எதிர்த்து வழக்கு தொடர மனுதாரருக்கு அடிப்படை உரிமை இல்லை எனக்கூறி வழக்கை தள்ளுபடி செய்து உத்தரவிட்டார்.

நேரடி பணி நியமனங்களின் போது, ஊழல் நடவடிக்கைகள் இல்லாத அளவுக்கு வெளிப்படைத்தன்மையை பின்பற்ற வேண்டும் என நீதிபதி அறிவுறுத்தினார்.

SCROLL FOR NEXT