தேசம்

பற்றி எரிந்த வணிக வளாகம்... பறிபோன 27 உயிர்கள்: டெல்லியில் நடந்த பயங்கரம்

காமதேனு

டெல்லி மெட்ரோ ரயில் நிலையம் அருகே உள்ள ஒரு வணிக வளாக கட்டிடத்தில் ஏற்பட்ட தீ விபத்தில் 27 பேர் உயிரிழந்தனர். உயிரிழந்தோரின் குடும்பத்தினருக்கு இரங்கல் தெரிவித்துள்ள பிரதமர் நரேந்திர மோடி, தலா 2 லட்சம் ரூபாய் நிவாரணமும் அறிவித்துள்ளார்.

தலைநகர் டெல்லியில் முண்ட்கா மெட்ரோ ரயில் நிலையம் அருகே, 3 அடுக்குகள் கொண்ட வணிகக் கட்டடம் உள்ளது. அங்கு நேற்று மாலை திடீரென தீப்பற்றியது. அடுத்தடுத்து 3 மாடிகளுக்கும் தீ பரவி புகை மண்டலம் சூழ்ந்ததில், உள்ளே இருந்தவர்கள் வெளியே வர முடியாமல் சிக்கித் தவித்தனர். சிலர் கட்டிடத்தில் இருந்து குதித்து உயிர்தப்பிக்க முயன்றனர். தகவலறிந்து தீயணைப்புப் படையினர் 24 வாகனங்களில் விரைந்து வந்து, தீயை கட்டுப்படுத்த போராடினர். இந்த விபத்தில் 27 பேர் உடல்கருகி உயிரிழந்தனர்.

50 க்கும் அதிகமானோர் காயங்களுடன் மீட்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இதனால் உயிரிழப்புகளின் எண்ணிக்கை மேலும் அதிகரிக்கக்கூடும் என்று அஞ்சப்படுகிறது. தீ விபத்துக்கான காரணம் இதுவரை தெரியவில்லை. இதனிடையே, வணிக வளாகத்தில் நிறுவனம் நடத்திய 2 பேரை கைது செய்து போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர். வணிக வளாகத்திற்கு தீயணைப்பு துறையிடம் இருந்து அனுமதிச்சான்று வாங்கவில்லை என்று கூறப்படுகிறது. இந்த கட்டிட உரிமையாளர் தலைமறைவாக உள்ளதாக போலீஸார் தெரிவித்துள்ளனர்.

உயிரிழந்தோரின் குடும்பங்களுக்கு தலா 2 லட்சம் ரூபாயும் காயமுற்றோருக்கு தலா 50 ஆயிரம் ரூபாயும் நிவாரணம் வழங்கப்படும் என்றும் பிரதமர் மோடி அறிவித்துள்ளார். தீ விபத்தில் உயிரிழந்தோரின் குடும்பத்தினருக்கு குடியரசுத் தலைவர் ராம் நாத் கோவிந்த், மத்திய அமைச்சர் அமித் ஷா, காங்கிரஸ் எம்பி ராகுல் காந்தி, டெல்லி முதல்வர் அர்விந்த் கெஜ்ரிவால் உள்ளிட்டோர் இரங்கல் தெரிவித்துள்ளனர்.

முதல்வர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டுள்ள இரங்கல் செய்தியில், விபத்தில் பல உயிர்கள் பரிதாபமாக உயிரிழந்தது மிகவும் வேதனை அளிக்கிறது. உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு எனது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறேன். காயமடைந்தவர்கள் விரைவில் குணமடைய வாழ்த்துகிறேன்" என்று கூறியுள்ளார்.

SCROLL FOR NEXT