தேசம்

குப்பைமேட்டில் இரைதேடும் மான்: வைரல் வீடியோவால் வனத்துறை அதிர்ச்சி

காமதேனு

ஊரப்பாக்கம் பகுதியில் குப்பைமேட்டுப் பகுதியில் மான் ஒன்று இரையைத் தேடி அலையும் வீடியோ சமூக வலைதளங்களில் வேகமாகப் பரவி வருகிறது.

நகர்மயமாதலால் வனப்பகுதிகள் பெருமளவு அழிக்கப்பட்டு வருகிறது. இதனால் உணவு மற்றும் நீராதாரங்களைத் தேடி யானை, சிறுத்தை, மான், கரடி என வனவிலங்குகள் ஊருக்குள் வருவது தொடர்கதையாகியுள்ளது. இந்த நிலையில் பிளாஸ்டிக் கழிவுகள் நிறைந்திருக்கும் குப்பைமேடு ஒன்றில் மான் ஒன்று இரை தேடி வந்த வீடியோ வைரலாகி வருகிறது.

அந்த வீடியோவை பாலாஜி என்பவர் சமூக வலைதளங்களில் பகிர்ந்துள்ளார். இதுகுறித்து அவரிடம் கேட்ட போது, “நேற்று இரவு ஊரப்பாக்கம் வழியாகச் சென்று கொண்டிருந்தேன். அப்போது மான் ஒன்று குப்பை கொட்டப்பட்ட பகுதியில் உணவைத் தேடிக் கொண்டிருந்தது. பிளாஸ்டிக் குப்பைகள் நிறைந்த பகுதியில் மான் இரை தேடுவது, வருத்தமான உணர்வை ஏற்படுத்தியது. இந்தப்பகுதிக்கு அருகே மதுரை மீனாட்சிபுரத்திற்கு பின்புறமாகப் பெரிய வனப்பகுதி உள்ளது. அப்பகுதியிலிருந்து மான்கள் அடிக்கடி ஊருக்குள் வருகின்றன. விலங்குகளுக்குத் தேவையான உணவு வனப்பகுதியில் கிடைக்காததால் மான்கள் மக்கள் வசிக்கும் பகுதிக்கு வருகின்றன. இதனால் சிறுத்தைகளும் ஊருக்குள் வரும் அபாயம் உள்ளது. எனவே, வனத்துறையினர் உரிய நடவடிக்கை எடுத்துத் தீர்வு காணவேண்டும்” என்றார். இந்த வீடியோ வைரலாகி வருவதால் வனத்துறையினர் அதிர்ச்சியடைந்துள்ளனர்.

SCROLL FOR NEXT