தேசம்

சூறாவளி புயலாக மாறியது 'மாண்டஸ்': தஞ்சை, திருவாரூரில் பள்ளிகளுக்கு இன்று விடுமுறை

காமதேனு

வங்கக்கடலில் உருவான காற்றழுத்தத் தாழ்வுப் பகுதி, விரைவாக வலுவடைந்து  'மாண்டஸ்' புயலாக வலுப்பெற்றது.  அது இன்று காலை நிலவரப்படி சூறாவளி புயலாக  உருவெடுத்துள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

கடந்த 5-ம் தேதியன்று தெற்கு அந்தமான் கடல் பகுதியில் குறைந்த காற்றழுத்த தாழ்வு நிலை உருவானது.  அது சிறிது சிறிதாக வலுப்பெற்று தற்போது 'மாண்டஸ்' சூறாவளி புயலாக உருவெடுத்துள்ளது. இதனையடுத்து தமிழகத்தின் கடலோர மாவட்டங்களில் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன.  தேசிய பேரிடர் மீட்பு படையினர்  மற்றும் மாநில பேரிடர் மீட்பு படையினர்  புயலால் பாதிக்கப்பட வாய்ப்புள்ள  மாவட்டங்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர். 

இன்று காலை நிலவரப்படி சென்னையிலிருந்து 620 கிலோ மீட்டர் தொலைவில் மையம் கொண்டுள்ளது 'மாண்டஸ்' புயல். எட்டு கிலோமீட்டர் வேகத்தில்  மேற்கு, வட மேற்கு திசையில் அது மெல்ல நகரக்கூடும்.  நாளை இரவு தொடங்கி நாளை மறுதினம் (டிச.10) காலைக்குள் புதுச்சேரிக்கும், ஸ்ரீஹரிகோட்டாவுக்கும்   இடையே கரையைக் கடக்க வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

அப்போது  மணிக்கு 85 கிலோ மீட்டர் வேகத்தில் காற்று வீசும் என்றும், நாளை மாலை முதல் பத்தாம் தேதி காலை வரை எழுபது கிலோமீட்டர் வேகத்தில் காற்று வீசும் என்றும் தெரிவிக்கப் பட்டுள்ளது.

மாண்டஸ் புயல் கரையை நெருங்குவதால் தமிழகத்தின் ஒன்பது துறைமுகங்களில் 2 மற்றும் 4 ம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றப்பட்டுள்ளது.  இன்று தொடங்கி நாளை மறுதினம் வரையிலும்  தமிழக கடல் பகுதிகள் கொந்தளிப்புடன் காணப்படும்.  9ம் தேதி மாலை முதல் 10 ம் தேதி காலை வரை மணிக்கு எழுபது கிலோமீட்டர் வேகத்தில் காற்று வீசப்படும் என்பதால் மூன்று தினங்களுக்கு மீனவர்கள் கடலுக்குள் செல்ல வேண்டாம் என்று எச்சரிக்கப்பட்டுள்ளது. 

புயல் நெருங்கி வருவதன் விளைவாக இன்றும், நாளையும் சென்னையில் அதிக கனமழைக்கு வாய்ப்பு உள்ளதாகவும், செங்கல்பட்டு, புதுவை மற்றும் விழுப்புரத்தில் நாளை அதிக கனமழைக்கு வாய்ப்பு இருப்பதாகவும் வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. கனமழை எச்சரிக்கையால் தஞ்சை மாவட்டத்தில் பள்ளி, கல்லூரிகளுக்கு இன்று விடுமுறை அளிக்கப் பட்டுள்ளது.  திருவாரூர் மாவட்டத்தில் பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை அறிவிக்கப் பட்டுள்ளது.

SCROLL FOR NEXT