தேசம்

மாமல்லபுரத்தில் கரையை கடக்கிறது மாண்டஸ் புயல்; தயாராகும் தமிழக அரசு: 7 மாவட்டங்களுக்கு அலர்ட்!

எம்.சகாயராஜ்

மாண்டஸ் புயல் நாளை இரவு மாமல்லபுரம் அருகே கரையை கடக்க இருக்கும் நிலையில், இதனை சமாளிக்க தமிழக அரசு தயாராகி இருக்கிறது. 7 மாவட்டங்களுக்கு அதி கனமழை எச்சரிக்கை விடப்பட்டுள்ளதால் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.

தென்மேற்கு மற்றும் அதனை ஒட்டியுள்ள தென்கிழக்கு வங்கக்கடலில் நிலவிய ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் நேற்று இரவு புயலாக வலுப்பெற்று தென்மேற்கு வங்கக் கடல் பகுதியில் நிலை கொண்டிருந்தது. தற்போது நிலவரப்படி காரைக்காலுக்கு 420 கிலோ மீட்டர் கிழக்கு தென்கிழக்கு மற்றும் சென்னைக்கு 510 கிமீ தென்கிழக்கு நிலை கொண்டுள்ளது. இது மேற்கு- வட மேற்கு திசையில் நகர்ந்து வட தமிழகம், புதுச்சேரி, தெற்கு ஆந்திரா கடற்கரையில் புதுச்சேரிக்கும், ஸ்ரீஹரிகோட்டாவுக்கு இடையே மாமல்லபுரம் அருகே நாளை இரவு கரையை கடக்கிறது.

இந்தப் புயல் மணிக்கு தற்போது 12 கிலோமீட்டர் வேகத்தில் நகர்ந்து வருகிறது. நாளை காலை வரை தீவிரப் புயலாக நகர்ந்து தொடர்ந்து வலுவிழந்து கரையை கடக்க கூடும் என்று கணிக்கப்பட்டுள்ளது. புயல் கரையை கடக்கும் பகுதிகளில் கனமழை பெய்ய வாய்ப்பு இருப்பதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

இதனிடையே, புயல் கரையைக் கடக்க உள்ள நிலையில் அதனை சமாளிக்க தமிழக அரசு தயாராகி வருகிறது. சென்னை தலைமைச் செயலகத்தில் தலைமைச் செயலாளர் இறையன்பு, சென்னை வானிலை ஆய்வு மண்டல இயக்குநர் பாலகிருஷ்ணனுடன் ஆலோசனை நடத்தினார். இதையடுத்து, அதிக கனமழை எச்சரிக்கை விடப்பட்டுள்ள மாவட்டங்களில் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அளிக்க தலைமைச் செயலாளர் உத்தரவிட்டார்.

இதைத் தொடர்ந்து சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், வேலூர், ராணிப்பேட்டை, கடலூர், விழுப்புரம் ஆகிய மாவட்டங்களில் பள்ளி, கல்லூரிகளுக்கு நாளை விடுமுறை அளித்து அந்தந்த மாவட்ட ஆட்சியர்கள் அறிவித்துள்ளனர்.

SCROLL FOR NEXT