போராட்டம் நடத்திய விவசாயிகளிடம் பேச்சு வார்த்தை
போராட்டம் நடத்திய விவசாயிகளிடம் பேச்சு வார்த்தை 
தேசம்

பொங்கல் பரிசுடன் கரும்பு வழங்க வேண்டும்: போராட்டம் நடத்திய 200 விவசாயிகள் மீது 4 பிரிவுகளில் வழக்கு

காமதேனு

பொங்கல் பரிசுடன் கரும்பு வழங்க வேண்டும் என்பதை வலியுறுத்தி கடலூர் மாவட்டத்தில் போராட்டம் நடத்திய விவசாயிகள் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது. 

தமிழ்நாடு அரசின் சார்பில் பொங்கல் பரிசாக ரொக்க பணமும் அதனுடன் கரும்பு உள்ளிட்ட  பொங்கலுக்குத் தேவையான மளிகைப் பொருட்களும் கடந்த சில ஆண்டுகளாக வழங்கப்பட்டு வந்தது. திமுக ஆட்சி அமைந்த பிறகு  கடந்த ஆண்டு கொடுத்த மளிகைப் பொருட்கள் தரம் குறைவாக இருந்ததாகவும்,  பல இடங்களில் சில பொருட்கள் கொடுக்கவில்லை என்றும் புகார் எழுந்தது.

இதனையடுத்து இந்த வருடம் பொங்கலுக்கு ரூபாய் ஆயிரம் ரொக்கப் பணமும், ஒரு கிலோ சர்க்கரை, ஒரு கிலோ பச்சரிசி ஆகியவை மட்டுமே வழங்கப்படும் என தமிழக அரசு நேற்று முன்தினம் அறிவித்தது. இது கரும்பு சாகுபடி செய்துள்ள விவசாயிகளுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

விவசாயிகளிடமிருந்து கரும்பை அரசு கொள்முதல் செய்து பொங்கல் பரிசுடன் சேர்த்து வழங்க வேண்டும் என்று தமிழக முன்னாள் முதல்வர் எடப்பாடி பழனிசாமி,  பாஜக தலைவர் அண்ணாமலை, பாமக நிறுவன தலைவர் மருத்துவர் ராமதாஸ் உள்ளிட்ட அரசியல் தலைவர்களும் கோரிக்கை விடுத்துள்ளனர்.  விவசாய சங்கத் தலைவர்கள் பலரும் இதுகுறித்து அரசுக்கு வேண்டுகோள் விடுத்துள்ளனர்.

இந்த கோரிக்கையை வலியுறுத்தி கடலூர் மாவட்டம் விருத்தாசலம் அருகே குள்ளஞ்சாவடியில் நேற்று 200-க்கும் மேற்பட்ட விவசாயிகள் சாலை மறியல் செய்து,  சாலையில் சமையல் செய்து சாப்பிட்டும்,  ஒப்பாரி வைத்தும்,  பட்டை நாமத்துடன் பிச்சை எடுத்தும் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

அவர்களுடன் கடலூர் மாவட்ட வருவாய் அலுவலர் பேச்சுவார்த்தை நடத்தினார். சுமார் நான்கு மணி நேரத்திற்குப் பிறகு இந்த போராட்டத்தை விவசாயிகள் விலக்கிக் கொண்டனர்.

இந்த நிலையில் நேற்று சாலை மறியலில் ஈடுபட்ட 200  விவசாயிகள் மீது குள்ளஞ்சாவடி போலீஸார் வழக்குப் பதிவு செய்துள்ளனர்.  நான்கு பிரிவுகளில் அவர்கள் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது விவசாயிகள் தரப்பில் பெரும் அதிர்ச்சியை  ஏற்படுத்தியுள்ளது.

தாங்கள் பயிரிட்டுள்ள பொங்கல் கரும்பினை அரசே நேரடியாக கொள்முதல் செய்தால் அதற்கு உரிய விலை கிடைக்கும் . எனவே, பொங்கல் பரிசுடன் தமிழக அரசு கரும்பையும் சேர்த்து வழங்க வேண்டும் என்று விவசாயிகள் கோரிக்கை விடுத்து வருகின்றனர். கடலூர் மாவட்டம் மட்டுமல்லாது மேலும் பல மாவட்டங்களிலும் இந்த கோரிக்கையை வலியுறுத்தி விவசாயிகள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். அவர்களை ஒடுக்கும் வகையில் கடலூர் மாவட்ட காவல்துறை வழக்குப் பதிவு செய்துள்ளது விவசாயிகளிடம் கடும் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.

SCROLL FOR NEXT