தேசம்

பிஎஃப்ஐ அமைப்பை சேர்ந்த 8 பேருக்கு என்ஐஏ காவல்: பூந்தமல்லி சிறப்பு நீதிமன்றம் அனுமதி!

காமதேனு

தேசியப் பாதுகாப்பு முகமையால் கைது செய்யப்பட்ட பிஎஃப்ஐ அமைப்பைச் சேர்ந்த 8 பேரை, 3 நாள் காவலில் எடுத்து விசாரணை செய்யத் தேசியப் பாதுகாப்பு முகமைக்கு பூந்தமல்லி சிறப்பு நீதிமன்றம் அனுமதி வழங்கியுள்ளது.

நாடு முழுவதும் பாப்புலர் ஃப்ரன்ட் ஆஃப் இந்தியா அமைப்புக்குத் தொடர்புடைய பல்வேறு இடங்களில் கடந்த 22-ம் தேதி தேசியப் பாதுகாப்பு முகமையினர் அதிரடியாகச் சோதனை நடத்தினர். அமலாக்கத் துறையினரும் அவர்களுடன் சோதனையில் ஈடுபட்டனர். நூற்றுக்கும் அதிகமானோர் இதில் கைது செய்யப்பட்டனர். இதைத் தொடர்ந்து பாப்புலர் ஃப்ரன்ட் ஆஃப் இந்தியாவைச் சட்ட விரோத அமைப்பாக அறிவித்த மத்திய உள்துறை அமைச்சகம், அந்த அமைப்புக்கு 5 ஆண்டுகள் தடை விதிக்கப்படுவதாக அறிவித்தது. மேலும் அதன் துணை அமைப்புகளுக்கும் இந்த தடை பொருந்தும் எனத் தெரிவிக்கப்பட்டிருந்தது. அந்த அமைப்பின் இணைய தளங்கள், சமூக வலைத்தளங்களும் முடக்கப்பட்டுள்ளன.

மதுரை, கடலூர், ராமநாதபுரம் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் கைது செய்யப்பட்ட பிஎஃப்ஐ அமைப்பைச் சேர்ந்த 8 பேர் இன்று பூந்தமல்லி சிறப்பு நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டனர். அவர்களை விசாரணை செய்ய அனுமதி கோரி தேசியப் பாதுகாப்பு முகமையினர் சார்பில் இன்று மனுத் தாக்கல் செய்யப்பட்டது. இதை ஏற்ற நீதிமன்றம் அவர்கள் 8 பேரையும், மூன்று நாட்கள் காவலில் எடுத்து விசாரிக்க அனுமதி அளித்துள்ளது.

SCROLL FOR NEXT