மனோ தங்கராஜ்
மனோ தங்கராஜ் 
தேசம்

பிரதமர் குறித்து தமிழக அமைச்சரின் சர்ச்சைப் பதிவு: பின்னணி என்ன?

காமதேனு

பிரதமர் நரேந்திரமோடி குறித்துத் தமிழக பால்வளத்துறை அமைச்சர் மனோதங்கராஜ், தன் முகநூல் பக்கத்தில் புகைப்படத்துடன் பதிவிட்டுள்ள ஒரு பதிவு பாஜக வட்டாரத்தைக் கொதிப்படையச் செய்துள்ளது.

கடந்த 2019ம் ஆண்டு முதல் கட்டுமானப் பணிகள் நடைபெற்றுவந்த புதிய நாடாளுமன்றக் கட்டிடத்தை பிரதமர் நரேந்திரமோடி நேற்று திறந்துவைத்தார். சாவர்க்கர் பிறந்தநாளில் இந்தப் புதிய நாடாளுமன்றக் கட்டிடத்தை திறந்தது, நாட்டின் முதல் குடிமகனான ஜனாதிபதியை அழைக்காதது ஆகியவற்றைக் காரணம்காட்டி இந்த நிகழ்வை திமுக, காங்கிரஸ், இடதுசாரி இயக்கங்கள், விசிக உள்ளிட்ட 20 எதிர்கட்சிகள் புறக்கணித்தன.

இந்நிலையில் தமிழகத்தைச் சேர்ந்த 20 ஆதினங்கள் அழைக்கப்பட்டு இருந்தனர். திருவாடுதுறை ஆதீனம் பிரதமர் நரேந்திர மோடிக்கு செங்கோல் கொடுத்தார். கோளறு பதிகமும் வாசிக்கப்பட்டது. இந்நிலையில் செங்கோல் முன்பு படுத்த நிலையில் வணங்கினார் பிரதமர் மோடி. அப்போது ஆதினங்கள் அருகில் நின்றுகொண்டு பிரதமர் மோடியை வாழ்த்திய சம்பவமும் நடந்தது. இந்தப் புகைப்படத்தைத் தன் முகநூலில் பகிர்ந்திருக்கும் பால்வளத்துறை அமைச்சர் மனோதங்கராஜ், மூச்சு இருக்கா? மானம்? ரோஷம்? என பதிவிட்டுள்ளார். இது சமூகவலைதளங்களிலும் வைரல் ஆகியுள்ளது.

பின்னணி என்ன?

அமைச்சர் மனோதங்கராஜின் சொந்த மாவட்டமான கன்னியாகுமரியில் பாஜக மிக வலுவாக உள்ளது. அங்கு அவருக்கு பாஜகவினர் மிகவும் குடைச்சலும் கொடுக்கின்றனர். மனோதங்கராஜ் கிறிஸ்தவர் என அவர் இந்து கோயில் விழாக்களில் வடம் பிடித்து இழுத்து நிகழ்வைத் தொடங்கி வைக்க வந்தபோது கூட சர்ச்சையாக்கின இந்து அமைப்புகள். இதனால் அவரது பத்மநாபபுரம் சட்டமன்றத் தொகுதிக்குள் வரும் வேளிமலை முருகன் கோயில் விழாவில் கூட சிக்கலில் சிக்கினார். இதேபோல் மண்டைக்காட்டில் வழக்கமாக இந்து சேவா சங்கம் என்னும் அமைப்பு திருவிழாவின் போது நடத்தும், சமய மாநாட்டை இம்முறை அறநிலையத்துறையே நடத்தும் என அமைச்சர் மனோதங்கராஜ் அறிவிக்க, கடைசியில் அதிலும் சர்ச்சையில் சிக்கினார். கடைசியில் பாஜகவின் குரலுக்கே செவி சாய்க்க வேண்டிய சூழல் ஏற்பட்டது.

பாஜக முகாம் அவரை குமரியில் வெகுவாகவே சேதப்படுத்தி வருகின்றது. இதனால் பாஜகவை மிகவும் தீவிரமாக எதிர்த்துவரும் மனோதங்கராஜ் இந்தப் பதிவைப் போட்டுள்ளார் என்கின்றார்கள் உள்நடப்பு அறிந்தவர்கள். மனோ, கிறிஸ்தவராக இருந்தாலும் கடந்த சிவராத்திரியின் போது ஈஷா விழாவில் அவர் கலந்துகொண்டு இதேபோல் ஆன்மீக அமைதியைக் காட்டியதும் குறிப்பிடத்தக்கது.

SCROLL FOR NEXT