தேசம்

ஆதார் பெயரில் அநாமதேய அழைப்பு; பறிபோனது வங்கி இருப்பு: நுகர்வோர் ஆணையம் அதிரடி தீர்ப்பு!

காமதேனு

ஆதார் அழைப்பின் பெயரில் வங்கி இருப்பை இழந்ததாக வாடிக்கையாளர் தொடுத்த வழக்கில், சேவை குறைபாடு உடைய வங்கிக்கு வாடிக்கையாளர் இழந்த தொகையோடு ரூ.10 ஆயிரம் நஷ்ட ஈடு விதித்தும் மாவட்ட நுகர்வோர் குறைதீர் ஆணையம் உத்தரவு பிறப்பித்துள்ளது.

நாகர்கோவில் வாட்டர் டேங்க் ரோடு பகுதியை சேர்ந்தவர் லால் மோகன்(62). ஓய்வு பெற்ற மத்திய அரசு ஊழியர். இவர் வடசேரியில் தேசிய மயமாக்கப்பட்ட வங்கியில் ஓய்வூதிய சேமிப்புக் கணக்கை வைத்துள்ளார். சில நாட்களுக்கு முன்பு தொலைபேசியில் ஆதார் எண்ணை இணைக்க வேண்டும் என அவருக்கு அழைப்பு வந்துள்ளது.

அந்த அழைப்பை நம்பிய லால் மோகனும் தனது ஆதார் எண்ணை கொடுத்துள்ளார். அடுத்த சில நிமிடங்களில் அவரது சேமிப்புக் கணக்கில் இருந்து ரூ.25 ஆயிரம் எடுக்கப்பட்டதாக குறுந்தகவல் வந்தது. என்ன செய்வதென்று அவர் சுதாரிப்பதற்குள் இதேபோன்று பலமுறை அவரது கணக்கில் இருந்து பணம் எடுக்கப்பட்டது.

சம்பவம் குறித்து அவர் காவல்துறையில் பின்னர் புகார் அளித்தார். ஆனாலும் பணம் திரும்ப கிடைக்கவில்லை. இதுதொடர்பாக சம்பந்தப்பட்ட வங்கியின் மேலாளரிடம் கேட்டபோது, உரிய பதிலும் கிடைக்கவில்லை. மேலும் இது தொடர்பாக லால் மோகன் வழக்கறிஞர் மூலம் நோட்டீஸ் அனுப்பியும் வங்கியிடமிருந்து பதில் வரவில்லை.

இதனால் மனவேதனை அடைந்த லால்மோகன் மாவட்ட நுகர்வோர் குறைதீர்க்கும் ஆணையத்தில் வழக்கு தொடர்ந்தார். மாவட்ட நுகர்வோர் குறைதீர் ஆணைய தலைவர் சுரேஷ், உறுப்பினர் சங்கர் ஆகியோர் வழக்கை விசாரித்தனர். தேசிய மயமாக்கப்பட்ட வங்கியின் சேவை குறைபாட்டை சுட்டிக்காட்டிய நுகர்வோர் குறைதீர்க்கும் ஆணையம், பாதிக்கப்பட்ட லால் மோகனுக்கு ஏற்கனவே வங்கியில் இருந்து எடுக்கப்பட்ட ரூ. 70 ஆயிரத்துடன் நஷ்டஈடாக ரூ.10 ஆயிரம் மற்றும் வழக்கு செலவுக்கு ரூ.5 ஆயிரம் என மொத்தம் ரூ.85 ஆயிரம் வழங்க உத்தரவிட்டது.

SCROLL FOR NEXT