தேசம்

பாஜகவில் சேர மாணவிகளுக்கு உத்தரவிட்ட விவகாரம்: குஜராத் கல்லூரி முதல்வர் ராஜினாமா

காமதேனு

பாஜகவில் அடிப்படை உறுப்பினர்களாகச் சேருமாறு மாணவிகளுக்கு உத்தரவிட்டதாகக் குற்றம்சாட்டப்பட்ட குஜராத் கல்லூரி முதல்வர் ரஜ்னிபாலா கோஹில் நேற்று (ஜூன் 27) ராஜினாமா செய்தார்.

குஜராத்தின் பாவ்நகரில் உள்ள ஸ்ரீமதி நர்மதாபாய் சத்ராபுஜ் காந்தி மகளிர் கல்லூரியின் பொறுப்பு முதல்வராக இருந்தவர் ரஜ்னிபாலா கோஹில். ஸ்ரீமதி ருக்‌ஷாமணிபேன் தீபசந்த் கார்டி பாவ்நகர் ஸ்த்ரீ கேலவாணி மண்டல் எனும் அறக்கட்டளை இந்தக் கல்லூரியை நடத்திவருகிறது. இந்நிலையில், சில நாட்களுக்கு முன்பு கல்லூரி மாணவிகளுக்கு அவர் அனுப்பிய சுற்றறிக்கை சமூகவலைதளங்களில் வைரலானது. அதில், மாணவிகள் பாஜகவில் தங்களை உறுப்பினர்களாகச் சேர்த்துக்கொள்வதற்காக, தங்கள் பாஸ்போர்ட் சைஸ் புகைப்படத்தையும் செல்போனையும் கல்லூரிக்குக் கொண்டுவருமாறு அவர் உத்தரவிட்டிருந்தார். பாவ்நகர் மாநகராட்சிக்குட்பட்ட பகுதிகளில் வசிக்கும் மாணவிகள் மட்டும்தான் பாஜகவில் அடிப்படை உறுப்பினர்களாகச் சேர முடியும் என்றும் அந்த உத்தரவில் தெரிவிக்கப்பட்டிருந்தது.

இதையடுத்து, ஒரு கல்லூரியின் முதல்வரே ஓர் அரசியல் கட்சியில் சேருமாறு மாணவிகளுக்கு உத்தரவிடுவதா எனும் கேள்வி எழுப்பப்பட்டது. கடும் விமர்சனங்களும் எழுந்தன. இதையடுத்து, மகாராஜா கிருஷ்ணகுமார்சின்ஹி பாவ்நகர் பல்கலைக்கழகத்தின் துணைவேந்தர் இதுகுறித்து விளக்கம் கேட்டு அவருக்கு சம்மன் அனுப்பினார்.

இந்நிலையில், கல்லூரி முதல்வர் பதவியை ரஜ்னிபாலா கோஹில் நேற்று ராஜினாமா செய்தார்.

‘நேர்மையானவர்!’

இதுதொடர்பாக, ஊடகங்களிடம் பேசிய அறக்கட்டளையின் நிர்வாக இயக்குநர் தீரேந்திர வைஷ்ணவ், “பாஜகவில் சேருமாறு சுற்றறிக்கை அனுப்பப்பட்ட தகவல் ஞாயிற்றுக்கிழமை மாலை எனக்குக் கிடைத்தது. இதையடுத்து திங்கள்கிழமை காலை கல்லூரிக்குச் சென்றிருந்தேன். அப்போதுதான் ரஜ்னிபாலா ராஜினாமா செய்தது எனக்குத் தெரியவந்தது. நடந்ததற்குப் பொறுப்பேற்று ராஜினாமா செய்வது தனது தார்மிகக் கடமை என்று என்னிடம் அவர் சொன்னார்” என்று தெரிவித்திருக்கிறார்.

கூடவே, ரஜ்னிபாலாவின் செயலை நியாயப்படுத்திய தீரேந்திர வைஷ்ணவ், அந்தச் சுற்றறிக்கை அனுப்பப்பட்டதில் எந்தவித தீய நோக்கமும் இல்லை எனக் கூறியிருக்கிறார். ஜூன் 16 முதல் பாஜகவில் உறுப்பினர் சேர்க்கை தொடங்குவதாக ஒரு பெண்மணி, முதல்வர் ரஜ்னிபாலாவை அணுகியதன் பேரில் எதேச்சையாக இதை அவர் செய்துவிட்டதாகவும் குறிப்பிட்டிருக்கிறார். “ரஜ்னிபாலா நேர்மையானவர். அரசியல் அறிவியல் துறையில் சிறந்த பேராசிரியர்” என்றும் புகழ்ந்திருக்கிறார்.

2015-ல் டெல்லியின் ரயான் சர்வதேசப் பள்ளி நிர்வாகம், பாஜகவில் உறுப்பினர்களாகச் சேருமாறு ஆசிரியர்களுக்கும் மாணவர்களுக்கும் உத்தரவிட்டதாகச் செய்திகள் வெளியாகின. எனினும், அது தூய்மை இந்தியா திட்டம் தொடர்பாக எடுக்கப்பட்ட நடவடிக்கை என்றும், பாஜகவில் உறுப்பினர்களைச் சேர்ப்பதற்கான முயற்சி அல்ல என்றும் பள்ளி நிர்வாகம் விளக்கமளித்தது குறிப்பிடத்தக்கது.

SCROLL FOR NEXT