தேசம்

கேள்விக்குப் பதிலளிக்க முயன்ற மாணவி; மாரடைப்பால் மயங்கி விழுந்து சாவு: வகுப்பறையில் நடந்தது என்ன?

காமதேனு

ஆசிரியரின் கேள்விகளுக்குப் பதில் அளித்துக் கொண்டிருந்த 7-ம் வகுப்பு மாணவி திடீரென மாரடைப்பு ஏற்பட்டு மயங்கி விழுந்து உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

ஆந்திரா மாநிலம், நெல்லூர் மாவட்டம் விஞ்சமூரில் ஜில்லா பரிஷத் அரசு மேல்நிலைப்பள்ளி உள்ளது. இந்த பள்ளியில் அதே பகுதியைச் சேர்ந்த சேக்சஜிதா(13) என்ற மாணவி 7-ம் வகுப்பு படித்து வந்தார். உயிரியல் ஆசிரியர் நேற்று பாடங்களை நடத்திக் கொண்டிருந்தார். அப்போது அவர் சேக்சஜிதாவுடன் சில கேள்விகளை எழுப்பினார். அதற்கு அவர் பதில் அளித்துக் கொண்டிருந்த போது திடீரென நெஞ்சைப் பிடித்துக் கொண்டு மயங்கி விழுந்தார். இதைக் கண்ட ஆசிரியர் மற்றும் மாணவர்கள் உடடினயாக மாணவி சேக்சஜிதாவை மருத்துவமனைக்குக் கொண்டு சென்றனர். அங்கு மாணவியை பரிசோதித்த மருத்துவர்கள் ஏற்கெனவே அவர் உயிரிழந்து விட்டதாக கூறினர். தகவல் அறிந்த மாணவியின் பெற்றோர், உயிரற்ற தங்கள் மகளின் உடலைப் பார்த்து கதறி அழுதனர்.

இதையடுத்து உயிரியல் ஆசிரியரிடம் போலீஸார் விசாரணை நடத்தினர். அப்போது அவர் கூறுகையில், " சேக்சஜிதாவிடம் கேள்விகளைக் கேட்டுக் கொண்டிருந்தேன். அவர் நல்லமுறையில் பதில் அளித்தார். திடீரென அவர் ஒரு பக்கம் சாய்ந்து விழுந்ததால் வலிப்பு ஏற்படுகிறதோ என்று நினைத்தேன். ஆஈனால், அதற்குள் அவர் உடல் துடிப்பு அடங்கி விட்டது. ஐந்து நிமிடங்களுக்குள் மருத்துவமனைக்கு மாணவியைத் தூக்கிச் சென்றோம். ஆனால், அவர் ஏற்கெனவே உயிரிழந்து விட்டதாக மருத்துவர்கள் கூறினர்" என்று கண் கலங்கினார். 7-ம் வகுப்பு மாணவி மாரடைப்பால் உயிரிழந்த சம்பவம் நெல்லூர் மாவட்டத்தில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

SCROLL FOR NEXT