தேசம்

‘இட ஒதுக்கீட்டை ரத்து செய்வதா?’

காமதேனு

இட ஒதுக்கீட்டு முறையை ரத்து செய்யுமாறு கோரிய சட்டக்கல்லூரி மாணவிக்கு உச்ச நீதிமன்றம் இன்று எச்சரிக்கை விடுத்திருக்கிறது.

இமாச்சல பிரதேசம் மாநிலத்தை சேர்ந்தவர் ஷிவானி. இவர் ’எல்.எல்.எம்’ சட்டப் படிப்பு பயின்று வருகிறார். இவர் தாக்கல் செய்த பொதுநல வழக்கொன்று இன்று(டிச.13) உச்ச நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது. தலைமை நீதிபதி டி.ஒய்.சந்திரசூட் மற்றும் பி.எஸ்.நரசிம்மா ஆகியோர் வழக்கை விசாரித்தனர்.

’சாதி அடிப்படையிலான இட ஒதுக்கீட்டு முறை நாட்டின் பாகுபாடுகளுக்கு காரணமாகிறது. எனவே நடப்பிலுள்ள இட ஒதுக்கீட்டு முறையினை ரத்து செய்ய உத்தரவிட வேண்டும்’ என்று அந்த பொதுநல மனு கோரியிருந்தது. இதனையடுத்து ஷிவானியின் வழக்கறிஞரை நீதிபதிகள் வறுத்தெடுத்து விட்டனர். ‘இது என்ன மாதிரியான மனு? பொதுநல வழக்கு என்ற பெயரில் அடிப்படையற்ற மனுக்களை தாக்கல் செய்வீர்களா? இது விளம்பரத்துக்காக தாக்கல் செய்யப்பட்ட மனுவாக தெரிகிறது. இம்மாதிரியான மனுக்களுக்கு கடும் அபராதம் விதிக்க நேரிடும்’ என்று எச்சரித்தனர்.

இதனையடுத்து ஷிவானியின் வழக்கறிஞர், வழக்கை வாபஸ் பெறுவதாக தெரிவித்ததை அடுத்து உச்ச நீதிமன்ற நீதிபதிகள் சமாதானமடைந்தனர்.

SCROLL FOR NEXT