தண்ணீர் பட்ஜெட் நகலை கூடுதல் தலைமைச் செயலர் சாரதாவிடம் வழங்கும் முதல்வர் பினராயி விஜயன்
தண்ணீர் பட்ஜெட் நகலை கூடுதல் தலைமைச் செயலர் சாரதாவிடம் வழங்கும் முதல்வர் பினராயி விஜயன் 
தேசம்

கேரளத்தின் தண்ணீர் பட்ஜெட்; இந்தியாவில் இது புதுசு!

காமதேனு

தண்ணீருக்கு என தனித்துவ பட்ஜெட் நடைமுறையை கேரளா அறிமுகம் செய்துள்ளது. இந்திய அளவில் இது முதல் முன்னெடுப்பு என்றும் முதல்வர் பினராயி விஜயன் தெரிவித்துள்ளார்.

காலநிலை மாற்றம் காரணமாக உலகெங்கும் நன்னீருக்கான தட்டுப்பாடு அதிகரித்து வருகிறது. நீரினை சேமிப்பது, வீணாக்காது தடுப்பது, மறைநீர் விழிப்புணர்வு ஆகியவை சர்வதேச நாடுகள் மத்தியில் அதிகரித்து வருகின்றன. இந்த வரிசையில் இந்தியாவின் முதல் மாநிலமாக கேரளத்தில், தண்ணீருக்கு என தனித்துவ பட்ஜெட் அமலாகிறது. முதல் கட்டமாக உள்ளாட்சி அமைப்புகள் அளவில் இந்த பட்ஜெட் செயலாக்கம் பெற இருக்கிறது.

கடவுளின் தேசமென புகழப்படும் கேரளத்தில் தண்ணீருக்கு பஞ்சமில்லை. 44 நதிகள், ஏராளமான ஓடைகள், ஏரிகள் என நீர் நிலைகள் கேரளாவில் நிறைந்திருக்கின்றன. நீர் நிலைகளை மையமாகக் கொண்ட கேரளாவின் சுற்றுலா தலங்களும், சர்வதேச அளவில் பிரசித்தி பெற்றவை.

ஆனபோதும், கேரளத்தை தண்ணீர் பஞ்சம் அவ்வப்போது வாட்டி வதைக்கிறது. இதனை கருத்தில் கொண்டு நீர் வளங்களை பாதுகாக்கவும், நீர் மேலாண்மையை முறையாக அமல்படுத்தவும், நீர் நுகர்வு குறித்து கணக்கெடுக்கவும் மற்றும் நீர் நிலைகளின் தூர்வாரல், புனரமைப்பு பணிகள், நீர் சேமிப்பு ஆகியவற்றை பெருக்கவுமான பல்வேறு தேவைகளை கருத்தில் கொண்டு தண்ணீர் பட்ஜெட் அமலுக்கு வருகிறது.

இதன் மூலம் மாநிலத்தின் தண்ணீர் பிரச்சினைக்கு முடிவு எட்டுவதுடன், தொலைநோக்கு பார்வையில் நீர் வளத்துக்கான திட்டங்களை கொண்டு வரவும் கேரளா முடிவு செய்துள்ளது. இது தொடர்பான தகவல்களை திருவனந்தபுரத்தில் நடைபெற்ற ஒரு நிகழ்வில் மாநில முதல்வர் பினராயி விஜயன் தெரிவித்துள்ளார்.

SCROLL FOR NEXT