தேசம்

`உங்கள் துறையில் முதலமைச்சர்'- டிஜிபி அலுவலகத்தில் காவலர்களிடம் நேரில் மனு வாங்கிய முதல்வர்!

காமதேனு

`உங்கள் துறையில் முதலமைச்சர்' திட்டத்திற்கு முதல்வர் ஸ்டாலின் காவல்துறை தலைமை இயக்குநர் அலுவலகத்திற்கு சென்று காவலர்களிடம் நேரடியாக மனுக்களை பெற்று அவர்களை குறைகளை கேட்டு தகுந்த நடவடிக்கை எடுக்கப்படும் என்று உறுதி அளித்தார்.

மாநிலத்தின் அமைதியை பேணிப் பாதுகாப்பு, சட்டம்- ஒழுங்கு பராமரிக்கும் முக்கிய பணிகளை ஆற்றி வரும் காவல்துறையின் பணிகள் சிறக்க புதிய காவல் நிலையங்கள் மற்றும் காவலர் குடியிருப்புகளை காட்டுதல், ரோந்து வாகனங்களை வழங்குதல், உள் கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்துதல் போன்ற பல்வேறு திட்டங்களை தமிழக அரசு செயல்படுத்தி வருகிறது. மேலும் மக்களுக்காக இரவு பகல் பாராமல் பணியாற்றி வரும் காவல்துறையின் நலன் காத்திட, காவலர்கள் தங்கள் உடல்நிலை பேணி காத்திடவும், தங்கள் குடும்பத்தாருடன் போதிய நேரம் செலவிடவும், இரண்டாம் நிலை காவலர் முதல் தலைமை காவலர்கள் வரையிலான ஆழிநர்களும் வாரத்தில் ஒருநாள் ஓய்வு வழங்கியது, காவல் ஆளிநர்களுக்கு வழங்கப்படும் காப்பீட்டு தொகையினை 60 லட்சம் ரூபாயாக உயர்த்தி வழங்கியது, இரவு ரோந்து பணிக்கு செல்லும் அனைத்து காவல் ஆளிநர்கள் மற்றும் காவல் ஆய்வாளர் வரையிலான அதிகாரிகளுக்கு சிறப்பு படியாக மாதம் 300 வழங்கியது, 15 நாட்களுக்கு ஒருமுறை உதவி ஆய்வாளர்கள் மற்றும் சிறப்பு உதவி ஆய்வாளர்களுக்கு ஒரு நாள் விடுப்பு வழங்குதல், காவல் ஆளிநர்கள் விடுப்பு எடுக்க வசதியாக சென்னை பெருநகர காவல் துறையால் உருவாக்கப்பட்ட விடுப்பு செயலி வெளியீடு, காவலர்களுக்கான இடர்படியை ஆயிரம் ரூபாயாக உயர்த்தியது போன்ற பல்வேறு திட்டங்களையும் செயல்படுத்தி வருகிறது.

அந்த வகையில் காவலர்கள் குறைகளை கேட்டு அவற்றை கலந்திட `உங்கள் துறையில் முதலமைச்சர்' திட்டத்திற்கு முதல்வர் ஸ்டாலின் காவல்துறை தலைமை இயக்குநர் அலுவலகத்திற்கு சென்று காவலர்களிடம் நேரடியாக மனுக்களை பெற்று அவர்களை குறைகளை கேட்டு தகுந்த நடவடிக்கை எடுக்கப்படும் என்று உறுதி அளித்தார். அதனை தொடர்ந்து முதலமைச்சர் காவல்துறை தலைமை இயக்குநர் அலுவலகத்தில் வைக்கப்பட்டுள்ள பார்வையாளர் பதிவேட்டில் குறிப்பு எழுதி கையெழுத்திட்டார்.

முன்னதாக சுற்றுச்சூழல் நலனையே முன்னிறுத்தும் விதமாக முதலமைச்சர் காவல்துறை தலைமையை இயக்குநர் அலுவலகத்தில் மரக்கன்று நட்டு வைத்தார். இந்த நிகழ்வின் போது உள்துறை கூடுதல் தலைமைச் செயலாளர் பணீந்திரரெட்டி, காவல்துறை தலைமை இயக்குநர் சைலேந்திரபாபு, சென்னை பெருநகர காவல் ஆணையர் சங்கர் ஜிவால், காவல்துறை கூடுதல் இயக்குநர் (சட்டம் மற்றும் ஒழுங்கு) செந்தாமரை கண்ணன் மற்றும் காவல்துறை உயர் அலுவலர் உடன் இருந்தனர்.

SCROLL FOR NEXT