தேசம்

கோலாகலமாகத் தொடங்கிய தமிழகத்தின் பழைமையான தசரா: செங்கல்பட்டிற்கு படையெடுக்கும் பக்தர்கள்!

காமதேனு

செங்கல்பட்டில் ஆண்டுதோறும் நடைபெறும் தசரா விழா இன்று கோலாகலமாக தொடங்கியுள்ளது. இதில் பங்கேற்ற சுற்றுவட்டார மக்கள் ஆர்வம் காட்டிவருகிறார்கள்.

 மைசூர் தசராவிற்கு அடுத்து மிகப் பழைமையான பாரம்பரியம் கொண்டது தசரா செங்கல்பட்டு தசரா. செங்கல்பட்டு அண்ணாசாலை பகுதியில் மிகவும் கோலாகலமாகக்  கொண்டாடப்படும் இந்த விழாவில், லட்சுமி பூஜை, பார்வதி பூஜை, சரஸ்வதி பூஜை என ஒன்பது நாளும் சிறப்பாக நடைபெறும். ஒவ்வொரு பகுதியிலிருந்தும் அம்மன் சிலைகள் ஊர்வலமாகக் கொண்டு வருவார்கள். பத்தாவது நாளான தசமி அன்று சூரனை வதம் செய்யும் நிகழ்ச்சி நடைபெறும். அப்போது  அம்மன் கரகங்கள் எடுத்துவந்து சின்ன கடையில் உள்ள கோயிலில் நிறுத்துவார்கள். அங்கிருந்து அண்ணாசாலை வழியாக ராமபாளையம் பகுதிக்குச் சென்று வன்னி மரம் அருகே சூரனை, அம்மன் வதம் செய்யும் நிகழ்வு மிகவும் சிறப்பாக நடைபெறும். அன்று மட்டும் சுமார் இரண்டு லட்சம் பேர் தசராவிற்கு வருவார்கள். பத்து நாட்கள் கோலாகலமாக நடைபெறும் இந்த விழாவிற்குச் சுற்றுவட்டார கிராமங்களிலிருந்தும், மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளிலிருந்தும் தினமும் பல்லாயிரக்கணக்கானவர்கள் வருவார்கள்.

ராட்டினங்கள், சறுக்கு விளையாட்டு, பந்து எறிதல், பேய் வீடு என சிறுவர்களைக் கவர்வதற்கான சிறப்பு அம்சங்கள் ஏராளமாக இருக்கின்றன. தரையில் விரிப்பு கடைகள், தள்ளுவண்டிக் கடைகள் என தெரு முழுக்கவே கடைகள் நிறைந்திருக்கும். பொம்மைகள், வீட்டு உபயோக பொருட்கள், விளையாட்டுப் பொருட்கள், ஆபரணங்கள் போன்றவற்றைப் பொதுமக்கள் வாங்கி செல்வார்கள். கரோனா காரணமாகக் கடந்த இரண்டு ஆண்டுகளாகத் தசரா நடைபெறாமல் இருந்த நிலையில் இந்த வருடம் நடைபெறும் தசராவில் கலந்து கொள்ளப் பொதுமக்கள் ஆர்வம் காட்டிவருகிறார்கள்.

SCROLL FOR NEXT