தேசம்

ஆதார் எண்ணுக்கு பதில் ‘விஐடி’ பகிர்வதே பாதுகாப்பு!

காமதேனு

பொதுவெளியில் ஆதார் எண்ணை பகிர்வதால் எழும் பாதுகாப்பு அச்சுறுத்தல்களை தவிர்க்க, ’விர்ச்சுவல் ஐடி’ வசதியை பயன்படுத்துமாறு மத்திய அரசு அறிவுறுத்தி உள்ளது.

பல்வேறு சேவைகள் மற்றும் தேவைகளுக்கு ஆதார் எண்ணை பகிர்வது அவசியமாகிறது. ஆனால், பொதுவெளியில் ஆதார் எண் வெளியாவது அந்த எண்ணுக்கு உரியவருக்கு பல்வேறு பாதகங்களை ஏற்படுத்துகிறது. குறிப்பாக அடையாளத் திருட்டு முதல் குற்றச் செயல்களில் சிக்கவைப்பது வரை அவை நீள்கின்றன. எனவே ஆதார் எண்ணை வெளியில் பகிர்வதில் கூடுதல் எச்சரிக்கை கொள்ளுமாறு மத்திய அரசு அறிவுறுத்தி உள்ளது.

இன்றைய டிஜிட்டல் யுகத்தில், உரிய ஆவணங்களை சமர்ப்பிப்பதன் மூலம் இருக்கும் இடத்திலிருந்தே, ஆன்லைன் வாயிலாகவே சகல அனுகூலங்களையும் சாதிக்கலாம். இதற்கு அலைபேசி எண், ஆதார் எண், பான் எண் உள்ளிட்ட தரவுகளை தர வேண்டியிருக்கும். ஆனால் அவற்றை பகிர்வதில் கவனம் பேணுமாறு மத்திய மின்னணு மற்றும் தகவல் தொழில்நுட்பத் துறை அமைச்சகம் அறிவுறுத்தி உள்ளது. அதிலும், ஆதார் எண்ணுக்கு எதிரான முறைகேடுகள் அதிகரிப்பதால், அவற்றை பயன்படுத்துவதற்கான நவீன உத்திகளையும் அமைச்சகம் வழி காட்டியுள்ளது.

ஆதார் எண் கோரப்படும் இடத்தில் அதனை பகிராமல் உரிய வசதிகளை பெறவும் முடியும். இதனை ஆதாருக்கான அதிகாரபூர்வ தளமான ’மைஆதார்’ வாயிலாக பெறலாம். இங்கு ஆதார் எண்ணுக்கான பிரத்யேக ’விர்ச்சுவல் ஐடி’யை உருவாக்கிக் கொள்ளலாம். இந்த ’விஐடி’யை ஆதார் எண்ணுக்கு பதிலாக பகிரலாம். அவ்வப்போது புதுப்பித்துக்கொள்வதன் மூலம் புதிய ’விஐடி’களையும் உருவாக்கி பயன்படுத்தலாம்.

இது தவிர தன்னுடைய ஆதார் எண் பயன்பாட்டை தடுக்க விரும்பும் ஒருவர் குறிப்பிட்ட காலத்துக்கு அவற்றுக்கு பூட்டு போடும் வசதியையும் பெறலாம். தேவையான காலத்தில் மட்டும் ஆதார் எண் பயன்பாட்டினை பூட்டு திறந்து அனுமதிக்கலாம்.

மற்றபடி, ஆதார் எண்ணை பெறுவதற்கு அங்கீகாரம் இல்லாத இடங்களில் அவற்றை பகிர்வதை தவிர்ப்பதே நல்லது. தனியார் நிறுவனங்கள் முதல் சமூக ஊடகங்கள் வரை ஆதார் உள்ளிட்ட தனிப்பட்ட தரவுகளை அளிப்பது சிக்கல்களுக்கும் வழிவகுக்கும்.

SCROLL FOR NEXT