தேசம்

அனைத்து கோயில்களிலும் செல்போன் பயன்பாட்டுக்குத் தடை விதிக்க வேண்டும்: அறநிலையத்துறைக்கு உத்தரவு

கி.மகாராஜன்

தமிழகத்தில் அனைத்து கோயில்களிலும் செல்போன் பயன்பாட்டுக்குத் தடை விதிக்க அறநிலையத்துறை ஆணையர் நடவடிக்கை எடுக்க வேண்டும் என உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோயிலில் செல்போன் பயன்பாட்டுக்குத் தடை விதிக்கக்கோரி அர்ச்சகர் சீதாராமன், உயர்நீதிமன்ற மதுரை கிளையில் மனு தாக்கல் செய்தார். இந்த வழக்கு ஏற்கெனவே விசாரணைக்கு வந்தபோது திருச்செந்தூர் கோயிலில் செல்போன் பயன்பாட்டுக்குத் தடை விதிக்க கோயில் நிர்வாகத்துக்கு நீதிபதிகள் உத்தரவிட்டனர். 

இந்த வழக்கு நீதிபதிகள் ஆர்.மகாதேவன், ஜெ.சத்ய நாராயண பிரசாத் அமர்வில் இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது திருச்செந்தூர் கோயில் இணை ஆணையர் மனு தாக்கல் செய்தார். 

அதில், நவ.14-ம் தேதி முதல் கோயில் பணியாளர்கள் உட்பட அனைவரும் கோயிலுக்குள் செல்போன் கொண்டுச் செல்வதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. கோயில் வளாகத்தில் செல்போன்களைப் பாதுகாக்கவும், டோக்கன் வழங்கவும் ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது.  கோயில் வளாகத்தில் 15 இடங்களுக்குச் செல்போன் கொண்டு செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது. இந்த இடங்களில் செல்போன் கொண்டுச் செல்வது கண்டறியப்பட்டால் பறிமுதல் செய்யப்படும் எனக் கூறப்பட்டிருந்தது. 

இதையடுத்து நீதிபதிகள், கோயில்களின் புனிதம் மற்றும் தூய்மையைக் காப்பாற்றும் வகையில் அனைத்து கோயில்களிலும் செல்போன் பயன்பாட்டுக்குத் தடை விதிப்பது மற்றும் பக்தர்கள் கலாச்சார உடை அணிந்து வருவதை உறுதிப்படுத்தும் உத்தரவை அறநிலையத்துறை ஆணையர் அமல்படுத்த வேண்டும் என உத்தரவிட்டனர். 

SCROLL FOR NEXT