தெலங்கானா முதல்வர் கே.சந்திரசேகர் ராவ்
தெலங்கானா முதல்வர் கே.சந்திரசேகர் ராவ் 
தேசம்

‘எங்கள் மாநிலத்தில் உங்கள் விசாரணை இனி நடக்காது’ - சிபிஐ-க்கு செக் வைத்த தெலங்கானா

காமதேனு

தெலங்கானா மாநிலத்தில் சிபிஐ அதிகாரிகள் விசாரணை நடத்துவதைத் தடை செய்யும் வகையிலான ஆணையை அம்மாநில அரசு பிறப்பித்திருப்பது பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது.

சிபிஐ என்பது டெல்லி போலீஸின் சிறப்புப் பிரிவு ஆகும். டெல்லி சிறப்பு போலீஸ் நிறுவனச் சட்டத்தின்கீழ் சிபிஐ உருவாக்கப்பட்டது. அந்தச் சட்டம் அளிக்கும் அதிகாரத்தின்கீழ்தான் சிபிஐ செயல்படுகிறது. அதேசமயம், ஒரு மாநிலத்தில் சிபிஐ அதிகாரிகள் விசாரணை நடத்த வேண்டும் என்றால் அதற்கு அந்த மாநிலம் அனுமதி வழங்க வேண்டும் என்பதும் முக்கியமானது.

எனினும், இந்தியாவின் எந்தப் பகுதியிலும் நடக்கும் குற்றங்கள் தொடர்பாக சிபிஐ அதிகாரிகள் விசாரணை நடத்த உச்ச நீதிமன்றமோ அல்லது உயர் நீதிமன்றங்களோ நேரடியாக உத்தரவிட முடியும். அதுபோன்ற தருணங்களில் மாநில அரசுகளின் ஒப்புதல் அவசியம் அல்ல.

2014-ல் ஆந்திர மாநிலத்திலிருந்து தனிமாநிலமாக தெலங்கானா உருவானதைத் தொடர்ந்து, 2016 செப்டம்பர் 23-ல் டெல்லி சிறப்பு போலீஸ் நிறுவனச் சட்டத்தின் அம்மாநிலத்தில் சிபிஐ விசாரணை நடக்க ஒப்புதல் வழங்கப்பட்டது.

இந்நிலையில், கடந்த ஆகஸ்ட் 30-ல் தெலங்கானா அரசு பிறப்பித்த உத்தரவில், அம்மாநிலத்தில் விசாரணை நடத்துவதற்காக சிபிஐ-க்கு வழங்கப்பட்ட அனுமதி ரத்து செய்யப்பட்டிருப்பதாகக் கூறப்பட்டிருக்கிறது.

அரசியல் எதிரிகளை மிரட்டிப் பணியவைக்க சிபிஐ-யை மத்திய பாஜக அரசு பயன்படுத்துவதாக எதிர்க்கட்சிகள் குற்றம்சாட்டிவரும் நிலையில், இத்தகைய நடவடிக்கையைத் தெலங்கானா அரசு எடுத்திருப்பது குறிப்பிடத்தக்கது.

SCROLL FOR NEXT