தேசம்

கார் சிலிண்டர் வெடித்த விவகாரம்: கோவையில் தொடங்கியது என்ஐஏ விசாரணை

காமதேனு

உக்கடம் பகுதியில் கார் சிலிண்டர் வெடித்த விவகாரம் குறித்து தேசிய புலனாய்வு முகமை (என்ஐஏ) அதிகாரிகள் இன்று விசாரணையைத் துவக்கியுள்ளனர்.

கோவை உக்கடம் அருகே, கோட்டைமேட்டில் பழமை வாய்ந்த சங்கமேஸ்வரர் கோயில் உள்ளது. இப்பகுதியில் அக். 23-ம் தேதி அதிகாலை கோட்டைமேட்டில் இருந்து டவுன்ஹால் நோக்கி வந்த கார் திடீரென வெடித்து தீப்பிடித்தது. தகவல் அறிந்த உக்கடம் போலீஸார் மற்றும் தீயணைப்புத்துறையினர் அங்கு சென்று சிறிது நேரம் போராடி தீயை அணைத்தனர்.

இந்த விபத்தில் காரை ஓட்டி வந்த நபர் உயிரிழந்தார். தீ விபத்தில் கார் இரண்டாக உடைந்து உருக்குலைந்தது. போலீஸாரின் முதல் கட்ட விசாரணையில், காரில் சமையலுக்கு பயன்படுத்தப்படும் இரண்டு சிலிண்டர்கள் இருந்ததும், அதில் ஒரு சிலிண்டர் வெடித்து தீ விபத்து ஏற்பட்டதும், உயிரிழந்தவர் உக்கடம் ஜி.எம்.நகரைச் சேர்ந்த ஜமேஷா முபின்(25) என்பதும் தெரியவந்தது.

மேலும், கார் உருக்குலைந்து கிடந்ததையும், பயங்கர சத்தம் வந்ததையும் வைத்து பார்க்கும் போது, காரில் வெடிமருந்துகளும் இருந்திருக்கலாமோ என்ற சந்தேகமும் போலீஸாருக்கு ஏற்பட்டது. இதையடுத்து வெடிகுண்டு தடுப்புப் பிரிவு போலீஸார் சம்பவ இடத்துக்கு வந்து மோப்ப நாய்களை வைத்து சோதனை செய்தனர். மேலும் தடய அறிவியல் துறையினர் சம்பவ இடத்துக்கு வந்து அங்கு இருந்த தடயங்களை சேகரித்தனர். காரின் உடைந்த பாகங்கள், ஆணிகள்,பால்ரஸ் குண்டுகள் உள்ளிட்டவற்றை சேகரித்து ஆய்வுக்கு அனுப்பி வைத்தனர்.

இந்த சம்பவம் தொடர்பாக உக்கடம் போலீஸார் உயிரிழப்பு, வெடிப்பொருள் தடைச்சட்டம் ஆகிய பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிந்தனர். மேலும், உயிரிழந்த ஜமேஷா முபின் வீட்டிலும் போலீஸார் சோதனை செய்தனர். அவரது வீட்டில் இருந்து பல கிலோ நாட்டு வெடிகுண்டு தயாரிப்பதற்கான வேதிப்பொருட்கள் உள்ளிட்டவற்றை பறிமுதல் செய்தனர்.

ஜமேஷா முபினுடன் நெருங்கிய தொடர்பில் இருந்த 7 பேரை நேற்று முன்தினம் பிடித்து போலீஸார் விசாரித்தனர். அதன் இறுதியில் உக்கடத்தை சேர்ந்த முகமது தல்கா(25), முகமது அசாருதீன்(23), ஜி.எம்.நகரைச் சேர்ந்த முகமது ரியாஸ்(27), பிரோஸ் இஸ்மாயில் (27), முகமது நவாஸ் இஸ்மாயில்(26) ஆகியோரை போலீஸார் நேற்று இரவு கைது செய்து விசாரித்து வருகின்றனர்.

இந்த நிலையில், இந்த சம்பவம் இடங்களில் என்ஐஏ அதிகாரிகள் இன்று விசாரணை நடத்தி வருகின்றனர். காரில் கொண்டு செல்லப்பட்ட பொருட்கள், ஜமேசா முபிiனின் வீட்டில் இருந்து கைப்பற்றப்பட்ட பொருட்கள் குறித்து காவல்துறையினரிடம், என்ஐஏ அதிகாரிகள் கேட்டறிந்து விசாரணை நடத்தி வருகின்றனர். இதனிடையே, என்ஐஏ அதிகாரிகள் விசாரணை நடத்தினாலும், இந்த சம்பவம் தொடர்பான விசாரணை கோவை காவல்துறை வசம்தான் உள்ளது என்று கோவை மாநகர காவல் ஆணையர் பாலகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.

SCROLL FOR NEXT