மோடி - ஜஸ்டின் ட்ரூடோ 
தேசம்

இந்தியா - கனடா மோதல்; நீறுபூத்த நெருப்பு வெடித்ததன் பின்னணி!

எஸ்.சுமன்

எல்லை தாண்டிய தாக்குதலின் பெயரால் பாகிஸ்தான், சீனா என அண்டை நாடுகள் இந்தியாவுடன் மோதல் போக்கை கொண்டிருப்பது வாடிக்கை. ஆனால், இதே குற்றச்சாட்டில் திடீரென இந்தியாவுடனான உறவில் முறுக்கிக் கொண்டிருக்கிறது கனடா தேசம். இருதரப்பு உறவும் வெகு வேகமாய் சீர்கெட்டிருக்கின்றன. என்ன நடந்தது என்பதை ஆராய்வதில் இரு தேசங்களுக்குமான பாடங்கள் காத்திருக்கின்றன.

இந்திய உடையில் ஜஸ்டின் ட்ரூடோ மற்றும் குடும்பத்தினர்...

கனடா பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோவுக்கு அந்நாட்டுக்கு வெளியே இந்தியாவில்தான் அபிமானிகள் அதிகம். தீபாவளி கொண்டாடுவதில் தொடங்கி, உணவு, உடுப்பு என இந்திய கலாச்சாரத்தை பிரதிபலிக்கும் பல்வேறு அம்சங்களில் அவதாரமெடுத்து இந்தியர்களை சிலாகிக்க வைப்பார். ஆனால் இப்போது, சட்டென்று சகலமும் தலைகீழாகி இருக்கின்றன. இந்தியர்களால் அதிகம் விமர்சிக்கப்படும் உலக நாட்டின் தலைவராக ஜஸ்டின் ட்ரூடோ மாறிவிட்டார். இதன் பின்னணியில் காலிஸ்தான் பிரிவினைவாதிகள் முதல் பாகிஸ்தானின் உளவு அமைப்பினர் வரை ஏராளமானோர் நீள்கின்றனர்.

ஜஸ்டின் ட்ரூடோ முழக்கம்

சில தினங்களுக்கு முன்னர் கனடா நாடாளுமன்றத்தில் உரையாற்றிய அந்நாட்டின் பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ, இந்தியா மீதும் இந்திய உளவு அமைப்பு மற்றும் பிரதமர் மீதும் கடுமையான குற்றச்சாட்டுகளை முன்வைத்தார். ஜூன் 18 அன்று கனடாவில் கொல்லப்பட்ட காலிஸ்தான் பிரிவினைவாதி ஹர்தீப் சிங் நிஜ்ஜார் விவகாரத்தின் பின்னணியில் இந்திய உளவு அமைப்பின் ஏஜெண்டுகள் இருப்பதாக பகிரங்கமாக குற்றம் சாட்டினார்.

கனடா நாடாளுமன்றத்தில் இந்தியாவுக்கு எதிராக பொங்கும் ஜஸ்டின் ட்ரூடோ

”கனடா குடிமகனும் சீக்கிய அமைப்பின் தலைவருமான நிஜ்ஜார் கொலையில் இந்திய அரசுக்கு நேரடி தொடர்பு இருப்பதாக நம்பத்தகுந்த ஆதாரங்கள் கிடைத்துள்ளன. கனடிய பாதுகாப்பு முகமைகள் மேற்கொண்ட விசாரணைகள், இந்தக் கொலையில் இந்திய ஏஜெண்டுகளுக்கு தொடர்பு இருப்பதை உறுதி செய்துள்ளன. நமது குடிமகனை பாதுகாப்பதும், நமது இறையாண்மையை பாதுகாப்பதும் அடிப்படையானவை. இந்தோ - கனடிய சமூகத்தினர் கோபமாகவும், அச்சமாகவும் உணர்வதை அறிவேன்” என்றெல்லாம் முழங்கினார் ட்ரூடோ.

இதற்கு கனடா, இந்தியா மட்டுமன்றி சர்வதேச அளவில் அதிர்வுகள் விளைந்தன. இதன் தொடர்ச்சியாக, கனடா வெளியுறவுத்துறை அமைச்சர் மெலனி ஜோலி கனடாவுக்கான இந்திய தூதரகத்தின் உயரதிகாரியான பவன் குமார் ராய் என்பவரை நாட்டைவிட்டு வெளியேறுமாறு உத்தரவிட்டார்.

இந்தியா எதிர்வினை

கனடாவின் வேகத்துக்கு இந்தியாவும் எதிர்வினையாற்ற வேண்டிய நெருக்கடி உருவானது. “கனடாவின் குற்றச்சாட்டுகள் அபத்தமானவை மற்றும் தூண்டப்பட்டவை. இந்திய பிரதமர் மீது கனடா பிரதமர் வைத்த குற்றச்சாட்டுகளை முழுமையாக நிராகரிக்கிறோம். காலிஸ்தான் தீவிரவாதிகளுக்கு தொடர்ந்து அடைக்கலம் தருவது மற்றும் அதன் மூலமாக இந்திய இறையாண்மைக்கு அச்சுறுத்தல் விடுப்பது ஆகியவற்றிலிருந்து கவனத்தை திசை திருப்பவே கனடா இந்த குற்றச்சாட்டுகளை முன்வைத்துள்ளது. தனது மண்ணில் இந்தியாவுக்கு எதிரான நடவடிக்கைகள் மீது தீவிரமான சட்ட நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு கனடா அரசிடம் வலியுறுத்துகிறோம்” என்று சாடிய இந்தியா, பதிலுக்கு கனடா தூதரகத்தின் உயரதிகாரியை 5 நாட்களுக்குள் நாட்டைவிட்டு வெளியேறுமாறு உத்தரவிட்டது.

மோடி - ஜஸ்டின்; டெல்லி ஜி20 சந்திப்பு

இந்தியா - கனடா இடையிலான இந்தப் பதற்றம் என்பது ஏதோ ஓரிரவில் தொற்றியது அல்ல. ஆண்டுகள் கணக்கில் வெடிக்கக் காத்திருந்த விவகாரம், நிஜ்ஜார் கொலை சம்பவத்தை அடுத்து வேறு வழியின்றி வெளிப்பட்டிருக்கிறது. இருதரப்பில் தொற்றிய பதற்றம் காரணமாக வர்த்தக உறவும் கெட்டிருக்கிறது. ஜி20 மாநாட்டுக்கு வருகை தந்த ஜஸ்டினுடன் இறுக்கமாகவே மோடி தென்பட்டார். கனடா திரும்புவதற்கான ஜஸ்டினின் பிரத்யேக விமானம் பழுதடைந்ததில் 2 தினங்கள் ஹோட்டல் அறையிலேயே அவர் அடைபட்டிருந்தார். இந்தியா பிரத்யேக விமானத்தை ஏற்பாடு செய்தபோதும், ஜஸ்டின் அதனை புறக்கணித்தார்.

காலிஸ்தான் பிரிவினைவாதிகள்

இந்தியா - கனடா இடையிலான பதற்றத்தின் பின்னணியில் காலிஸ்தான் பிரிவினைவாத அமைப்புகளும் அவற்றுக்கு அடைக்கலம் தரும் கனடாவின் கைங்கர்யமும் அடங்கியிருக்கிறது. பன்முகத்தன்மை வாய்ந்த இந்திய தேசத்தில், சீக்கியர்களின் வீரமும், தேசபக்தியும் தனிச்சிறப்பு வாய்ந்தது. இந்திய ராணுவத்தில் சீக்கிய பிரிவினரின் சாதனைகள் முன்னுதாரணமானவை. ஆனால், சீக்கியர்களில் ஒரு தரப்பினர் நெடுங்காலமாக வலியுறுத்தி வரும் தனிநாடு கோரிக்கை அவர்கள் மீது களங்கத்தை ஏற்படுத்தியது.

நிஜ்ஜார் படம் தாங்கிய பதாகையுடன் அவர் கொல்லப்பட்ட குருத்வாரா

பாகிஸ்தான் பிரிந்தது முதலே தங்களுக்கும் காலிஸ்தான் என்ற பெயரில் தனிநாடு வேண்டும் என சீக்கியர்களில் ஒரு சார்பிலானோர் போராட ஆரம்பித்தனர். இந்தியாவுக்கான குடைச்சல் வாய்ப்புகளை பயன்படுத்திக்கொள்ளத் துடிக்கும் பாகிஸ்தானின் ஐஎஸ்ஐ உளவு அமைப்பு, இந்த காலிஸ்தான் பிரிவினைவாதிகளை ஊட்டி வளர்த்தது. எல்லை மாநிலமான பஞ்சாப்பின் அமைதியை குலைக்கும் நோக்கில், இப்போது வரை ட்ரோன்கள் மூலமாக ஆயுதங்கள் மற்றும் போதைப் பொருட்களை எறிந்து வருகிறது.

பாகிஸ்தானுக்கு அப்பால் இன்னொரு தேசமும் காலிஸ்தான் பிரிவினைவாதிகளை ஆதரித்தது. தற்போதைய இந்தியா - கனடா பதற்றத்தின் விதை இங்கேதான் விழுந்தது. பஞ்சாப்புக்கு வெளியே சீக்கியர்கள் அதிகளவில் இருக்கும் தேசமாக கனடா உருவானது. அங்கு அப்படி குடியேறிய சீக்கியர்கள் தனிக்கட்சி கண்டதும், ஆட்சி அதிகாரத்தில் செல்வாக்கு பெற்றதும், சீக்கியர்களின் குரலை கனடா அரசியல்கட்சிகளும், கனடா அரசும் எதிரொலிக்கச் செய்தன.

கனடாவில் புதிய புறப்பாடு

ஜஸ்டின் ட்ரூடோ தலைமையிலான சிறுபான்மை கூட்டணியில் சீக்கியர்கள் அதிகம் அங்கம் வகிக்கும் புதிய ஜனநாயகக் கட்சிக்கு முக்கிய இடம் உண்டு. கன்சர்வேட்டிவ் கட்சியினருக்கு குடியேறிகள் என்றாலே ஒவ்வாது என்பதால், புலம்பெயர்ந்த இலங்கைத் தமிழர்கள் முதல் இந்திய சீக்கியர்கள் வரை லிபரல் கட்சியினரின் வாக்கு வங்கி வசீகரம் பெற்றது. கனடாவில் தங்கள் வாழ்வாதாரம், உரிமைகள் ஆகியவற்றுக்காக போராடிய கனடிய சீக்கியர் பிரதிநிதிகள், இந்தியாவிலிருக்கும் தங்களது வேர்களை மீட்கவும் கிளம்பினர்.

குருத்வாரா ஒன்றில் ஜஸ்டின் ட்ரூடோ

அதன் பின்னர் காலிஸ்தான் பிரிவினைவாதிகளின் ஆதரவு மட்டுமன்றி அவர்களின் புகலிடமாகவும் கனடா மாறிப்போனது. பஞ்சாப்பில் நிகழும் குழு மோதல்கள் முதல் படுகொலைகள் வரை சகலமும் கனடாவில் இருந்தே ரிமோட் மூலம் இயக்கப்பட்டன. கனடாவில் சீக்கியர்களின் குடியேற்றம் நாளுக்கு நாள் அதிகமாவதும், அவர்களின் இந்தியாவுக்கு எதிரான செயல்பாடுகளும் இந்தியாவுக்கு தலைவலியாகின.

காலிஸ்தான் ஆதரவாளர்களை தூண்டுவதில் பாகிஸ்தான் உள்நோக்கத்துடன் செயல்பட, அதையே சீக்கியர்களின் உரிமைப் போராட்டமாக கனடா அடையாளம் கண்டது. ஆனால் காலிஸ்தான் பெயரில் இந்தியாவில் சீக்கியர்களுக்கு மூளைச் சலவை, பஞ்சாப் மற்றும் ஹரியாணாவில் சட்டம் - ஒழுங்கு கெட்டது போன்ற கனடா ரிமோட் செயல்பாடுகள் இந்தியாவுக்கு உபத்திரவம் தந்தன. மேலும், கனடாவில் இந்திய கொடிக்கு அவமதிப்பு, இந்திய தூதரகம் மீதான தாக்குதல் போன்றவை அரங்கேறியதும், கனடா அதனை கண்டுகொள்ளாததும் இந்தியாவை சீண்டின.

மொஸாட் பாணியில் ’ரா’

காலிஸ்தான் புலிப்படை என்ற இந்திய பிரிவினைவாத அமைப்பின் தலைவராக இருந்தவர் ஹர்தீப் சிங் நிஜ்ஜார். ஜூன் 18 அன்று கனடாவின் பிரிட்டீஷ் கொலம்பியாவில் அமைந்துள்ள ஒரு சீக்கிய குருத்வாரா முன்பாக நிஜ்ஜார் சுட்டுக்கொலை செய்யப்பட்டார். இந்த படுகொலையின் பின்னணியில் இந்தியாவின் ரா ஏஜெண்டுகள் உள்ளதாக, கனடாவின் பாதுகாப்பு முகமைகள் விசாரணை தரவுகளின் அடிப்படையில் பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ சொல்கிறார்.

கொல்லப்பட்ட காலிஸ்தான் பிரிவினைவாதி நிஜ்ஜார்

இஸ்ரேலின் உளவு நிறுவனமான மொஸாட் பாணியை பின்பற்றி ரா இந்த நடவடிக்கையை மேற்கொண்டிருப்பதாக, இந்தியாவின் நடவடிக்கையை ஆதரிப்போர் கொண்டாடவும் செய்கிறார்கள். ஆனால், ரா ஏஜெண்டுகளின் நடவடிக்கையை வடகொரியாவின் பாணி என கனடா நிந்திக்கிறது. கனடாவின் மண்ணில் அதன் குடிமகனை கொன்றதை கனடிய மக்களின் பாதுகாப்பு மற்றும் கனடாவின் இறையாண்மைக்கான அச்சுறுத்தலாக அந்நாடு வர்ணித்தது சர்வதேச அளவில் விவாதத்துக்கு ஆளானது. ஆனால் ஆச்சரியமாக கனடாவின் நேச தேசங்கள் உட்பட பல்வேறு நாடுகளும் இந்த விவகாரத்தில் கனடாவை முற்றிலுமாக ஆதரிக்காது ஒதுங்கியே நிற்கின்றன.

உள்ளே - வெளியே அதிகரிக்கும் ஆதரவு

‘ஃபைவ் ஐ அலையன்ஸ்’ என்ற பெயரில் தங்கள் மத்தியில் உளவுத் தகவல்களை பகிர்ந்து கொள்வதற்கான கூட்டணியாக அமெரிக்கா, ஆஸ்திரேலியா, இங்கிலாந்து, நியூசிலாந்து உடன் கனடா இணைந்து செயல்படுகிறது. ஆனால், இந்த நாடுகள் வெளிப்படையாக கனடாவுக்கு ஆதரவு கரம் நீட்ட தயங்குகின்றன. ’இந்தியாவுக்கு எதிராக வலுவான ஆதாரம் உள்ளது’ என நாடாளுமன்றத்தில் கனடா பிரதமர் அறிவித்த பிறகும், ’இந்த விவகாரத்தில் முழுமையான விசாரணை நடத்தப்பட வேண்டும்’ என்று கனடாவின் நட்பு நாடுகள் விலகி நிற்பது கனடாவை காயம் செய்திருக்கிறது.

ஜஸ்டின் ட்ரூடோ

அதன் பிற்பாடு ஜஸ்டின் ட்ரூடோ சுருதி இறங்கினார். “இந்தியாவுடனான உறவை மோசமாக்க விரும்பவில்லை. இந்தியாவை சீண்டும் வகையில் எதனையும் பேசவில்லை. கனடா அரசு அறிந்த சில தகவல்களை பகிர்ந்து கொண்டிருக்கிறோம். சில விஷயங்களை தெளிபடுத்திக்கொள்ள இந்தியாவுடன் இணைந்து செயல்படத் தயாராக இருக்கிறோம்” என்று தணிந்திருக்கிறார் ட்ரூடோ. கனடா அரசு தன்னிடமுள்ள ஆதாரங்களை வெளியிடுமாறு எதிர்க்கட்சியான கன்சர்வேட்டிவ் கட்சி அங்கே எசப்பாட்டை ஆரம்பித்திருப்பதும் இதன் பின்னணியில் இன்னொரு காரணமாகி இருக்கிறது.

ஜி20 சந்திப்பில் கனடா - இந்திய பிரதமர்கள்

மொஸாட் பாணியில் அந்நிய தேசத்தில் இந்திய உளவு ஏஜெண்டுகளின் வதம், அதன் மூலம் பிரிவினைவாதிகளுக்கு இந்தியா சொல்லியிருக்கும் சேதி ஆகியவற்றுக்கு இந்தியாவிலும் ஆதரவு பெருகியிருக்கிறது. பிரதான எதிர்க்கட்சியான காங்கிரஸ் உட்பட பலதரப்பினரும் தங்களது தார்மிக ஆதரவை வழங்கியிருக்கிறார்கள். கடந்த மக்களவைத் தேர்தல் நெருக்கத்தில் இந்தியா மேற்கொண்ட எல்லை தாண்டிய துல்லிய தாக்குதல் நடவடிக்கைக்கு இணையாக இவை பார்க்கப்படுவது, அரசியல் ஆதாய ரீதியாக ஆளும் பாஜகவுக்கும் உற்சாகம் தந்திருக்கிறது!

SCROLL FOR NEXT