தேசம்

ஆயிரம் அடி ஆழம் வறண்ட பகுதியில் தானாக தண்ணீர் பீய்ச்சி அடிக்கும் போர்வெல்: ஆச்சரியப்படும் விவசாயிகள்

காமதேனு

ஆந்திரா மாநிலத்தில் ஆயிரம் அடி தண்ணீர் வராத பகுதியில் தண்ணீர் இல்லையென மூடப்பட்ட போர்வெல்லில் இருந்து தானாகவே தண்ணீர் பீய்ச்சி அடிப்பதால் அப்பகுதி விவசாயிகள் ஆச்சரியமடைந்துள்ளனர்.

ஆந்திரா மாநிலம், ஸ்ரீ சத்யசாய் மாவட்டம் கஜுகுண்டப்பள்ளியைச் சேர்ந்தவர் ஷாநவாஸ்கான். விவசாயியான இவர் இரண்டரை ஆண்டுகளுக்கு முன்பு 600 அடியில் ஆழ்துளை கிணறு( போர்வெல்) தோண்டினார். அப்போது சிறிது அளவிலேயே தண்ணீர் வந்துள்ளது. இதனால் விவசாயம் செய்வதற்காக ஆழ்துளை கிணற்றில் ஷாநவஸ்கான் மோட்டார் பொருத்தினார்.

ஆனால், போர் போட்ட சில நாட்களில் ஆழ்துளையில் தண்ணீர் வற்றிப் போனது. இதனால் மோட்டாரை கழற்றி விற்பனை செய்தார். இதன் காரணமாக போர்வெல் தண்ணீர் இல்லாமல் ஆண்டுக்கணக்கில் பயனின்றி மூடப்பட்டது. இந்த நிலையில், சமீபத்தில் பெய்த மழையால், நிலத்தடி நீர் உயர்ந்து, ஷாநவாஸ்கானின் போர்வெல்லில் இருந்து தானாக தண்ணீர் பீய்ச்சி அடித்து வெளியேறியது. இதனைப் பார்த்த ஷாநவாஸ்கான் ஆச்சரியமடைந்தார்.

இப்பகுதியில், ஆயிரம் அடி ஆழத்தில் போர்வெல் தோண்டியும் சொட்டு தண்ணீர் வராத நிலையில், ஷாநவாஸ்கானின் பயன்படாத ஆழ்துளை கிணற்றில் இருந்து தானே தண்ணீர் பொங்கி வருவதால் அப்பகுதி விவசாயிகள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.

SCROLL FOR NEXT