தேசம்

கிணற்றில் மிதந்த 3 சகோதரிகள், 2 குழந்தைகள் உடல்கள்: ராஜஸ்தானை உலுக்கிய கொடூர கொலைகள்

காமதேனு

ராஜஸ்தானில் வரதட்சணை கொடுமை காரணமாக 3 சகோதரிகள், 2 குழந்தைகள் கொலை செய்யப்பட்டு கிணற்றில் வீசப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

ராஜஸ்தான் மாநிலம், ஜெய்ப்பூர் மாவட்டத்தில் துது நகரில் கிணறு உள்ளது. அதில் இன்று மாலை 5 உடல்கள் மிதப்பதாக போலீஸாருக்குத் தகவல் கிடைத்தது. அவர்கள் சென்று கிணற்றில் இருந்து அந்த உடல்களை மீட்டனர்.
விசாரணையில், படுகொலை செய்யப்பட்டது சகோதரிகளான கலுதேவி(27), மம்தாதேவி(23), கம்லேஷ்(20) என அடையாளம் காணப்பட்டது. அத்துடன் மம்தா தேவி மற்றும் கம்லேஷ் ஆகியோர் நிறைமாத கர்ப்பிணிகளாக இருந்துள்ளனர். மேலும் கலுவின் 4 வயது குழந்தை மற்றும் பிறந்து 27 நாட்களேயான குழந்தைகளும் கொன்று கிணற்றில் வீசப்பட்டதும் தெரிய வந்தது.

இவர்கள் ஐந்து பேரும் புதன்கிழமை முதல் காணவில்லை என்றும், ஆனால், அவர்களை போலீஸார் தேடவில்லை என்றும் கூறப்படுகிறது. கடந்த 15 நாட்களுக்கு முன் கலுதேவியை அவர்களது உறவினர்கள் தாக்கியதில் கண்ணில் காயம் ஏற்பட்டது. இதற்காக சிகிச்சை முடிந்து சில நாட்களுக்கு முன்பு தான் வீட்டிற்கு வந்துள்ளார். குழந்தை திருமணத்தால் மூன்று சகோதரிகளும் பாதிக்கப்பட்டவர்கள் என்றும், வரதட்சணை கொடுமையால் அவர்களது மாமியார்களால் இந்த கொலைகள் நடந்திருக்கலாம் என போலீஸார் சந்தேகப்படுகின்றனர். இது தொடர்பாக தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர். 2 கர்ப்பிணிகள், 2 குழந்தைகள் உள்பட 5 பேர் கொல்லப்பட்ட சம்பவம் ராஜஸ்தானில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

SCROLL FOR NEXT